பாரிஸ், மே.15 –
பி.எஸ்.ஜி எனப்படும் பாரிஸ் செயின் ஜெர்மைன் கிளப்பின் புதிய பயிற்றுனராக தோமஸ் துச்சல் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் தோமஸ் துச்சல் கையெழுத்திட்டுள்ளதாக அந்த கிளப் அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில் பிரான்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் முடிந்தவுடன் நடப்பு பயிற்றுனர் உனய் எமெரியிடம் இருந்து அவர் பயிற்றுனர் பொறுப்பை ஏற்க விருக்கிறார்.
பி.எஸ்.ஜி போன்ற மிகப் பெரிய கிளப்பில் இணைவது குறித்து பெருமை கொள்வதாக தோமஸ் துச்சல் தெரிவித்தார். உலகின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர்களுடன் பணியாற்ற தாம் காத்து கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். இந்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. ஸ்பெயினின் ரியல் மாட்ரிட்டிடம் தோல்வி கண்டது முதல் புதிய பயிற்றுனரை அந்த கிளப் தேடி வந்தது.
2016/17 ஆம் பருவத்தில் ஜெர்மனியின் பொருசியா டார்ட்மூண்டை வழிநடத்திய, தோமஸ் துச்சல் கடந்த ஓராண்டாக எந்த ஒரு கிளப்பிலும் நிர்வாகி பொறுப்பை ஏற்கவில்லை. ஐரோப்பாவின் மிக சிறந்த பயிற்றுனர்களில் ஒருவராக தோமஸ் துச்சல் விளங்குவதாக பி.எஸ்.ஜி கிளப்பின் தலைவர் நசர் அல் கெலாஃபி தெரிவித்துள்ளார்.


