புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அம்னோவின் தலையெழுத்தை நீதிமன்றம் நிர்ணயிக்கட்டும்; ஆர்.ஓ.எஸ். அல்ல! அம்பிகா சீனிவாசன்
அரசியல்முதன்மைச் செய்திகள்

அம்னோவின் தலையெழுத்தை நீதிமன்றம் நிர்ணயிக்கட்டும்; ஆர்.ஓ.எஸ். அல்ல! அம்பிகா சீனிவாசன்

கோலாலம்பூர், மே 15-
அம்னோவின் சட்டப்பூர்வ நிலை விவகாரத்தில் ஏற்புடைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். மாறாக, தேசிய சங்கப் பதிவிலாகாவை (ஆர்.ஓ.எஸ்) பயன்படுத்தக்கூடாது என டத்தோ அம்பிகா சீனிவாசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஏற்புடைய நடைமுறையை அம்னோ விவகாரத்தில் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் ஆர்.ஓ.எஸ்சை பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதால் அந்த நடைமுறை தமக்கு பிடிக்கவில்லை என அவர் கூறினார்.

சிறந்த அரசாங்கம் இருக்க வேண்டுமென்றால் நமக்கு வலுவான எதிர்கட்சி தேவை. அம்னோவிற்கு என்ன நேர்ந்தாலும் அதில் ஏற்புடைய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நான் கருதுகின்றேன் என தேசிய மனித உரிமை சங்கத்தின் (ஹாக்காம்) தலைவரும் பெர்சேவின் முன்னாள் தலைவருமான டத்தோ அம்பிகா சீனிவாசன் பி.எப்.எம். வானொலி நிலையத்திற்கு அளித்த நேர்க்காணலில் கூறினார்.

இதற்கு முன்பு எதிர்கட்சிகள் எதிரியாக பார்க்கப்பட்ட நிலை இனியும் இருக்காது என நான் எதிர்பார்க்கின்றேன். மக்கள் எதிர்கட்சியினருக்கும் வாக்களித்துள்ளனர் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். இந்த அரசாங்கம் அம்னோ உறுப்பினர்கள் உள்பட அனைவருக்குமானது என்பதை புதிய அரசாங்கம் காட்ட வேண்டும் என அம்பிகா சீனிவாசன் வலியுறுத்தினார்.

அம்னோவின் கட்சி தேர்தல் ஆக கடைசியாக 2013ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது. அக்கட்சியின் சட்டவிதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு கட்சித் தேர்தலை நடத்தும் விதிமுறையை அக்கட்சி மீறியுள்ளது. ஆயினும், கட்சித் தேர்தலை அதிகபட்சம் 18 மாதங்களுக்கு தள்ளி வைப்பதற்கு கட்சி சட்டவிதியில் இடமும் உள்ளது. இதன் காரணமாக, கட்சியின் தேர்தலை தள்ளி வைப்பதற்கு அனுமதியளித்திருக்கும் ஆர்.ஓ.எஸ்.முடிவை எதிர்த்து அம்னோவின் 16 உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தனர். அவர்கள் அனைவரையும் அம்னோ கட்சியிலிருந்து நீக்கியது.

இதனிடையே, கடந்த வாரம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியை இழந்த நிலையில் அம்னோ தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பதவி விலகினார். அக்கட்சியின் இடைக்கால தலைவராக டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடியும் துணைத்தலைவராக டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேனும் பொறுப்பேற்றுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன