கோலாலம்பூர், மே 15-
மலேசியாவின் சாதனை புத்தகத்தில் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் பெயர் இடம்பெற்றுள்ளது. இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவர் என்ற சாதனையை அவர் புரிந்ததாகக் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பிரபாகரன் சாவி சின்னத்தில் போட்டியிட்டார். முன்னதாக பத்து தொகுதி வேட்புமனு தாக்கலின் போது பிகேஆரின் வேட்பாளர் தியான் சுவாவின் மனு நிராகரிக்கப்பட்டது. அதனால் பிகேஆர் பிரபாகரனை ஆதரிப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் பத்து தொகுதியில் 24438 வாக்குகள் பெரும்பான்மையில் பிரபாகரன் வெற்றி பெற்றார். குறிப்பாக தேசிய முன்னணியின் வேட்பாளரும் கெராக்கான் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோ டோமினிக் லாவ்வையும் அவர் வீழ்த்தினார். 22 வயது 3 மாதங்களே ஆகிய பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டது மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
1976ஆம் ஆண்டு துன் ரசாக் காலமான போது, பகாங் பெகான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நஜீப் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என சாதனையை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை பிரபாகரன் முறியடித்துள்ளார்.
மலேசிய சாதனை புத்தகத்தில் பிரபாகரன் இடம் பெற்றதற்கான தகவல் அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பிரபாகரனிடம் அந்த சான்றிதழ் மிக விரைவில் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.



