புத்ராஜெயா, மே 15-
பல்கலைக்கழக இந்திய மாணவர்கள் தொடர்ந்து சமூக நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் மல்டிமீடியா பல்கலைக்கழகத்தின் இந்திய கலாசாரப் பிரிவு இவ்வாண்டும் இலக்கியப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

இப்போட்டி மே 19ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் இரவு 7 மணிவரை மல்டிமீடியா பல்கலைக்கழகத்தின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த இலக்கியப் போட்டியில் ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்கள் கலந்து கொள்ளலாம். சிலாங்கூர், கோலாலம்பூர், பேரா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றார்கள்.

இந்த இலக்கியப் போட்டியில் பல பிரிவுகள் உள்ளன. திருக்குறள் ஓதும் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, கதை சொல்லும் போட்டி, ஓவியம் வரையும் போட்டி, மாறுவேடப் போட்டி என 8 பிரிவுகளில் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

இந்திய மாணவர்களிடையே இலக்கிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு ஒரு புத்துணர்வை தருமென இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழு இயக்குநர் விண்ணரசு அறிவழகன் கூறினார்.

இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகின்றது. இதில் ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. அதோடு அவர்களுக்கான உணவும் வழங்கப்படும். முற்றிலும் இலவசமாக நடக்கும் இந்த இலக்கிய விழாவில் இந்திய மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டுமென விண்ணரசு கேட்டுக் கொண்டார்.

இந்த இலக்கிய விழா குறித்த மேல் விவரங்களுக்கு 0102576174 அல்லது 014 9300831 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.