கோலாலம்பூர், ஜூன். 15-
இந்திய விவகாரங்களை நேரடியாக கவனிக்க மேலும் ஒரு முழு அமைச்சர் நியமிக்கபடலாம் என மனிதவள அமைச்சர் குலசேகரன் சூசகமாக் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் சில திட்டங்களை தாம் செயல்படுத்தப்போவதாக கூறிய அவர், இந்திய விவகாரங்களை நேரடியாக கவனிக்கும் ஒரு இந்திய அமைச்சர் நியமனம் செய்யப்பட்ட பிறகு மேல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கூறினார்.
மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த குடும்ப தின விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை கட்டம் கட்டமாக களைய வேண்டும். குறிப்பாக தமிழ்ப்பள்ளியின் ஏன் மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது என்பதை ஆராய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க தாம் ஆயுத்தமாகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த செடிக் சில திட்டங்களை செயல்படுத்தியது. இது தொடருமா என்ற கேள்விக்கு, அம்மாதிரியான திட்டத்தையும் கொண்டுள்ளதாக குலசேகரன் கூறினார்.
இந்திய விவகாரங்களை கவனிக்க மேலும் ஒரு முழு அமைச்சர் நியமிக்கப்படலாம். அவருடன் இணைந்து பல செயல் திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் குலசேகரன் குறிப்பிட்டார்.


