நாடாளுமன்றத்திற்கு திரும்பினார் முகைதீன்! எம்.பி.யாக பதவி உறுதிமொழி

கோலாலம்பூர், ஆக. 14-

உடல்நலக் குறைவு காரணமாக நீண்ட நாட்கள் விடுப்பில் இருந்த உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் இன்று மக்களவையில் பாகோ தொகுதி எம்.பி.யாகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார் இந்த பதவியேற்பு சடங்கு மக்களவைக் கூட்டம் கூடுவதற்கு முன்பாக அதன் சபாநாயகர், டத்தோ முகமட் அரிப் மாட் யூசோப் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக வயிற்றுப் பகுதியில் உள்ள கணையத்தில் மீண்டும் கட்டி வளராமல் இருக்க கடந்த மாதம் 12ஆம் தேதி மேற்கொண்ட அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் கீமோதெராபி சிகிச்சையை 6 மாதத்திற்கு மேற்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சருமான முகைதீனுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதில் குணமடைவதில் முழுமையான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு சிகிச்சை மேற்கொள்ள முகைதீனுக்கு கால அவகசம் தேவைப்படுவதால் அவருடைய பணிகள் குறைவாக இருக்கும் என்று பத்திரிகைச் செயலாளர் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டார்.

முகைதீன் விடுப்பில் இருந்த போது இடைக்கால உள்துறை அமைச்சராகப் பிரதமர், துன் டாக்டர் மகாதீர் முகமட் பணியாற்றினார்.

கடந்த 14ஆவதுப் பொதுத்தேர்தலில் பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முகைதீன் 6,927 வாக்குகள் பெரும்பான்மையில் பாஸ் கட்சி மற்றும் தே.மு வேட்பாளர்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.