அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > அர்ஜெண்டினாவின் 4 நட்புமுறை ஆட்டங்களில் மெஸ்சி பங்கேற்க மாட்டார் !
விளையாட்டு

அர்ஜெண்டினாவின் 4 நட்புமுறை ஆட்டங்களில் மெஸ்சி பங்கேற்க மாட்டார் !

பியூனோஸ் அயர்ஸ், ஆக.15-

அர்ஜெண்டினா கால்பந்து அணியின் உச்ச நட்சத்திரம் லியோனெல் மெஸ்சி, அந்த அணியின் நான்கு நட்புமுறை ஆட்டங்களில்  பங்கேற்க மாட்டார் என அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. ஐந்து முறை உலகின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதை வென்றுள்ள மெஸ்சி , 2016 ஆம் ஆண்டில் கோப்பா அமெரிக்கா கிண்ண கால்பந்துப் போட்டி முடிவடைந்ததும் அனைத்துலகப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

எனினும் மெஸ்சி தனது முடிவை மாற்றிக் கொண்டப் பின்னர் அர்ஜெண்டினா அணி 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தகுதிப் பெற உதவினார். இந்நிலையில் அர்ஜெண்டினாவின் நான்கு நட்புமுறை ஆட்டங்களில் மெஸ்சி பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டிருப்பதை அடுத்து அவர் அனைத்துலக கால்பந்து ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் குவாட்டாமாலவை சந்திக்கும் அர்ஜெண்டினா, அதன் பின்னர் நியூ யார்க்கில் கொலம்பியாவை சந்திக்கவிருக்கிறது. அதன் பின்னர் நடைபெறவிருக்கும் இரண்டு நட்புமுறை ஆட்டங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த ஆண்டின் இறுதி வரை , அர்ஜெண்டினா அணியின் ஆட்டங்களில் மெஸ்சி பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. எனினும் மெஸ்சி தற்காலிக ஓய்வில் இருக்கிறாரா அல்லது நிரந்தரமாக ஓய்வு பெற்று விடுவாரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக அர்ஜெண்டினாவின் கிலாரின் நாளிதழ் தெரிவித்துள்ளது.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன