கோலாலம்பூர், ஆக. 18-

மலேசியா கைப்பற்றியுள்ள ஜோ லோவுக்குச் சொந்தமான இக்குவானிமிட்டி சொகுசுக் கப்பலை குறைந்தது பாதி விலைக்கு விற்றால்கூட வெ. 50 கோடி வரை கிடைக்கும் என வழக்கறிஞர் ஆர்.சிவராசா கூறியுள்ளார்.

மலேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றும்போது அவர், அது தமது சொந்தக் கருத்து எனக் குறிப்பிட்டதோடு, காலப்போக்கில் சொத்தின் மதிப்பு குறைந்துவரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

தற்போது அந்தக் கப்பல் போர்ட் கிள்ளான், புலாவ் இண்டாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் விற்பனையில் கிடைக்கும் வெ. 50 கோடியை 1எம்டிபி கடனைச் செலுத்த முடியும் என ஊராட்சி மேம்பாட்டு துணைமைச்சருமான சிவராசா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சட்டத்துறைத் தலைவர் டோம்மி தோமஸ், அந்தக் கப்பலைச் சொந்தம் கொண்டாட யாரும் முன்வராவிட்டால், 3 அல்லது 4 மாதங்களில் அதனை விற்கலாம் எனக் குறிப்பிட்டார்.

அந்தக் கப்பலின் விவகாரத்தில் பல்வேறு நபர்களும் பல நிறுவனங்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், அது முடிய சில காலம் ஆகலாம் என கோடி காட்டினார். அந்த முறைகேட்டை ஆராய்ந்தால், அது ஜோ லோவை மட்டுமே குறிக்காது என்றும் அதில் வேறு சிலரும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்க நீதித்துறை 1எம்டிபியின் நிதியைக் கொண்டு முறைகேடாக வாங்கப்பட்ட சொத்துகளை அடையாளம் கண்டிருப்பதாகவும் அவை எங்கிருக்கிறது என்பதையும் அது சுட்டிக்கட்டியிருப்பதால், அவற்றைக் கைப்பற்ற பல மாதங்கள் ஆகாது. மேலும், அதில் துல்லிதமான தகவல்கள் தரப்படாவிட்டால், நீதிமன்றத்தில் அவற்றைப் பெற மனுத் தாக்கல் செய்வது கடினமாகும் என்றும் சிவராசா குறிப்பிட்டார்.