கோலாலம்பூர், செப் 8
ASTI எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டின் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவில் தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.
இந்த ASTI இயக்கம் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவை கடந்த 11 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த அறிவியல் விழா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை பயிற்றுவித்து அவர்களின் வழி மாணவர்களுக்கு சரியான பரிசோதனை முறைகளை கற்பித்து மாணவர்களை இந்த அறிவியல் விழாவில் ஈடுபடச் செய்கின்றது.
இதன் வழி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் வெளிநாடுகளில் நடைபெறும் அனைத்துலக போட்டிகளிலும் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைப்பது வருகின்றனர்.
ஆண்டுதோறும் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையே நடைபெறும் இந்த அறிவியல் விழா இவ்வாண்டு போதுமான நிதியின்மையால் மாநில அளவிலான அறிவியல் விழாவாக நடத்தாமல் தேசிய அளவிலான அறிவியல் விழாவாக பல மாற்றங்களுடன் மிக எளிமையான முறையில் நடத்தப்பட்டது என்று ASTI இயக்கத்தின் தலைவர் முனைவர் யூனுஸ் யாசின் தெரிவித்தார்.
இன்று தலைநகரில் சோமா அரங்கில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டின் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவிற்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போது செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
இவ்வாண்டிற்கான இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவில் மொத்தம் 327 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 154 பள்ளிகள் தேசிய அளவிற்கான அறிவியல் விழாவில் கலந்து கொள்ள தங்களின் அறிவியல் பரிந்துரையை சமர்ப்பித்தனர். அவற்றில் 111 பள்ளிகள் தங்களின் பரிந்துரைக்கு ஏற்ப முழுமையான அறிவியல் பரிசோதனையை காணொளியையும் அனுப்பி வைத்தனர். இறுதியில் நடுவர்கள் சிறந்த ஆய்வுகளையும் படைப்புகளையும் கொண்ட 10 தமிழ்ப்பள்ளிகளை தேர்வு செய்தனர் என்று அவர் சொன்னார்.
அதில் ஜோகூர் தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வாகை சூடியது. இப்பள்ளிக்கு வெ.1000 ரொக்கப் பரிசு, சவால் கிண்ணம் வழங்கப்பட்டது. லஞ்சாங் தோட்டம், மற்றும் பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளிகள் தங்க கிண்ணத்தை வென்றன. இவ்விரு பள்ளிகளுக்கு வெ.700 ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும். லோபாக், சங்காட் தோட்டம், ஜாலான் யஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிகள் வெள்ளிக் கிண்ணத்தை வென்றன. இப்பள்ளிகளுக்கு வெ.500 ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பூச்சோங், பெர்மாஸ் ஜெயா, தாமான் பெர்மாத்தா, மெந்தகாப் ஆகிய தமிழ்ப்பள்ளிகள் வெண்கல கிண்ணத்தை வென்றன. இப்பள்ளிகளுக்கு வெ.300 ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


