கோலாலம்பூர், செப். 13-

மஇகா இளைஞர் பகுதிக்கு நன்கு அறிமுகமான சுங்கை சிப்புட் நேருஜி பேரா மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்பட்டதற்கான முழுமையான காரணம் இதுவரையில் வெளிவரவில்லை. இருப்பினும் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் வழக்கறிஞர் தினாளன் டத்தோ ராஜகோபால் இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவருக்கு நேருஜி பிளவுபடாத ஆதரவை வழங்கியதன் காரணமாக அவர் தலைவர் பொறுப்பிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு தினாளனுக்கு முழுமையான ஆதரவு தெரிவித்து விருந்து நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நேருஜி கலந்து கொண்டார், இந்நிலையில் நேற்று அவர் பேரா மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மஇகாவின் இளைஞர் பகுதியின் தலைவர் பதவிக்கு இம்முறை நேரடிப் போட்டி நிலவுகின்றது. குறிப்பாக கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன் இம்முறை இளைஞர் பகுதியின் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள முடியாது என்பதால், தலைவர் பதவி காலியாகியுள்ளது.

இதனால் கட்சியின் நடப்புத் துணைத் தலைவரான நெகிரி செம்பிலானின் தினாளன் ராஜகோபால் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தலைவர் பதவிக்கு போட்டி நிலவாது என்ற நிலைதான் இருந்தது. ஆனால் இப்போது இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் புனிதன் பரமசிவம் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு தரப்பினரும் நாடு தழுவிய நிலையில் இளைஞர் பகுதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். தேர்தல் சமயங்களில் சில மனக்கசப்புகள் ஏற்படுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும் மாநில தலைவர் பதவியிலிருந்து நேருஜியை நீக்கியது தவறு என பேரா மாநில மஇகா இளைஞர்கள் கருதுகிறார்கள்.

குறிப்பாக சுங்கை சிப்புட் மட்டுமின்றி பேரா முழுவதுவும் நேருஜி நல்ல செல்வாக்கை கொண்டுள்ளார். இம்முறை மஇகா இளைஞர் பிரிவுன் மத்திய செயலவைக்குப் போட்டியிடுவதாக நேருஜி கூறிவிட்டார். தேர்தலுக்கு பிறகு மாநில தலைவராக அவர் நீடிக்கப்போவதில்லை என்பது இதன் மூலமே அறிந்து கொள்ள முடிகின்றது. இந்நிலையில் திடீரென அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதால் இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொரும்பாலான ஆதரவை இழக்கலாம்.

நேருஜியை மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கினாலும் 18 தொகுதி இளைஞர்கள் இன்றளவும் அவருக்கு பிளவுப்படாத ஆதரவை வழங்கி வருகிறார்கள். இவ்வாரம் சனிக்கிழமை இளைஞர் பிரிவு தேர்தலுக்கான வேட்புமனு நடைபெறவுள்ளது. ஆனால் அந்த வேட்புமனு தாக்கல் தள்ளி வைக்கப்படுமென பரலவாகப் பேசப்படுகின்றது. அதன் பின்னர் இளைஞர்கள் மத்தியில் பிளவை உண்டாக்கி இளைஞர் பகுதியின் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற திட்டத்தையும் சிலர் வகுத்துள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் நெருஜியை நீக்கியது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை.