கோலாலம்பூர், செப். 13-
போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் ம.இ.கா. போட்டியிடாது. அதோடு அத்தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்தார்.
முன்னதாக போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் ம.இ.கா. போட்டியிடுதைக் காட்டிலும் அம்னோ போட்டியிடுவதுதான் சரியான தேர்வாக இருக்கும். அதோடு, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தேசிய முன்னணி கட்சியின் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட தொகுதிகளை இன்னமும் நீட்டிப்பது ஏற்புடையது அல்ல என அம்னோவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கூறியிருந்தார்.
இதனிடையே, வியாழக்கிழமை ம.இ.கா. தலைமையகத்தில் கூடிய மத்திய செயலவைக் கூட்டத்தில் போர்ட்டிக்சன் இடைத்தேர்தலை ம.இ.கா. புறக்கணிப்பதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார். ம.இ.கா. உட்பட இதர கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே அம்னோ தமது முடிவை அறிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து சுயமாக முடிவு எடுக்க அக்கட்சி முடிவு செய்து விட்டது. அதனால், போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் ம.இ.கா. தலையிடாது. அதோடு, அத்தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தையும் அது கொண்டிருக்கவில்லை என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
ம.இ.கா. உருமாற்றத்திற்கு தயாராகிவிட்டது. இப்போது கட்சிக்கு என்ன தேவை என்பதுதான் நமது நோக்கமாக இருக்கின்றது. கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கின்றோம். இதற்கு என்ன தேவையோ அதை செயல்படுத்த கட்சி தயங்காது என அவர் கூறினார். தேசிய முன்னணியிலிருந்து விலகும் எண்ணத்தை ம.இ.கா. கொண்டிருக்கவில்லை. ஆனால், அதற்கு வாய்ப்பு ஏற்பட்டால் அது குறித்தும் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ம.இ.கா.வுடன் கலந்துரையாடாமல் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றது. இது தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் தேசிய முன்னணியின் கூட்டம் கூடிய விரைவில் நடத்தப்படும். அப்போதுதான் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பது முடிவு செய்யப்படும் என டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தற்போது கூறியுள்ளார். ஆனால், ம.இ.கா. தமது முடிவில் உறுதியாக இருக்கின்றது.
போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் நாங்கள் போட்டியிடவில்லை. இத்தேர்தலை ம.இ.கா. புறக்கணிக்கிறது என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் திட்டவட்டமாகக் கூறினார். முன்னதாக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுக்கும் வகையில் புதன்கிழமை போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக டத்தோ டேனியல் பாலகோபால் அறிவித்திருந்தார். கடந்த மே மாதம் நடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்ட டத்தோ டேனியல் பாலகோபால் 36,225 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தேசிய முன்னணியின் சின்னத்தில் போட்டியிட்ட ம.இ.கா.வின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகனுக்கு 18,515 வாக்குகள் கிடைத்தன. பாஸ் சின்னத்தில் போட்டியிட்ட மாசுப் ரோஸ்லானுக்கு 6,594 வாக்குகள் கிடைத்தன.
பாஸ் கட்சிக்கு ஆதரவு
பாஸ் கட்சியுடன் ம.இ.கா. இணைந்து பணியாற்றும் என அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பாஸ் கட்சியின் கொள்கைகளும் நடைமுறைகளும் சிறப்பான முறையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பாஸ் கட்சிக்கு ம.இ.கா. தொடர்ந்து ஆதரவு வழங்கும் என தெரிவித்தார்.
சமயம் சார்ந்த பிரச்னைகளையும் அவர்கள் வெளிப்படையாகவே ஆராய்கின்றார்கள். குறிப்பாக, மற்ற இனங்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். அவர்களின் நடைமுறை ம.இ.கா.வை கவர்ந்துள்ளது என்றார் அவர்.
தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா. வெளியேறுமா என்பது குறித்து இப்போது பதில் கூற முடியாது. அதற்கு காலம்தான் பதில் சொல்லும். நடப்பு சூழலில் ம.இ.கா. எதிர்நோக்கும் சவால்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியமாகக் கருதப்படுகின்றது. இதற்கு என்ன தேவையோ அதை கட்சி முன்னெடுக்கும் என அவர் கூறினார். கட்சியின் மேம்பாட்டிற்காக தேசிய முன்னணியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டாலும் அது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இதனிடையே, ம.இ.கா.வின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலிலும் வேட்புமனுத்தாக்கலிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

