வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அன்வார் பிரதமராவதில் புதிய சிக்கல்! வழக்கறிஞர் கங்காதரன்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அன்வார் பிரதமராவதில் புதிய சிக்கல்! வழக்கறிஞர் கங்காதரன்

பெட்டாலிங் ஜெயா, டிச. 31

பிகேஆர் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் தமது உறுதியை வெளிப்படுத்திய போதிலும் அது சட்டப்படி அமலுக்கு வராது என்று கருதப்படுவதாக அரசியலமைப்புச் சட்ட வழக்கறிஞர், ஆர்.கங்காதரன் கூறியுள்ளார்.

இதில் அன்வாரைப் பிரதமராக மாட்சிமைத் தங்கிய மாமன்னர் நியமிப்பதற்கு முன் அவருக்கு மக்களவையில் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுகிறது.

அதுவும் இது ஒன்றும் சாதாரணமான ஒரு வாக்குறுதி அல்ல. அதனால் கூட்டரசு அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க முடியும் என்று பத்திரிகையாளர்களிடம் கங்காதரன் குறிப்பிட்டதாக ஃபிரி மலேசியா டுடே இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த 1998ஆம் ஆண்டில் துணைப் பிரதமர் பதவியிலிருந்து அன்வாரை நீக்கியப் பின்னர் 2016இல் இருவரும் மீண்டும் ஒன்றாய் இணைந்து அரசியல் கூட்டணியை அமைத்து கடந்த 14ஆவதுப் பொதுத்தேர்தலில் தே.மு.வை வீழ்த்தினர். பக்காத்தான் ஹராப்பான் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின்படி போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அன்வார் வெற்றி பெற்றதோடு இன்னும் 2 ஆண்டுகளில் மகாதீருக்கு அடுத்தபடியாக அரசியல் களத்தில் இறங்கும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளார்.

இந்த இடைபட்டக் காலத்தில் மகாதீரைப் பிரதமராக நியமிக்க பார்ட்டி பெர்சத்து, பிகேஆர், ஜசெக, அமானா என பக்காத்தானின் 4 உறுப்புக் கட்சிகளும் ஒப்புக் கொண்டன. இதில் மகாதீர் வரும் 15ஆவதுப் பொதுத்தேர்தல் வரை நாட்டின் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று கிளந்தான் மாநிலத்திலிருந்து ஒரு பிரதிநிதி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பார்ட்டி பெர்சத்துவின் 2ஆம் ஆண்டுக் கூட்டத்திலும் எழுப்பப்பட்டது.

அந்தப் பரிந்துரையை மகாதீர் மறுத்து 2 ஆண்டு காலம் பதவியில் இருப்பதைப் பின்பற்றுவேன். ஒருசிலர் இந்த 2 ஆண்டை மிகவும் குறுகிய காலமாகத்தான் கருதுகின்றனர். எனினும், இது அவர்களின் கருத்து என்றார்.

இதில் என்னதான் வாக்குறுதி அளித்திருந்தாலும் பிரதமாராகுவதற்கு முன்பு கூட்டரசு அரசியலைப்புச் சட்டம், 43ஆவது சரத்தை அன்வார் நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும் என்று கங்காதரன் வலியுறுத்தினார். இந்த சரத்தின்படி பிரதமராக ஒருவரை மாமன்னர் நியமிப்பதற்கு முன்பு அதற்குப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

சட்ட ரீதியில் எடுத்துக் கொண்டால் ஓர் அரசியல் கட்சியைப் பிரதிநிதித்து என்னதான் வேட்பாளர் ஒருவர் போட்டியிட மக்கள் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் பிரதமராகுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் தீர்மானிப்பர்.

அப்படி மரணம் அல்லது பதவி விலகல் காரணமாக அப்பதவி காலியானாலும் கூட அதன் பிறகு வரக்கூடிய பிரதமரைத் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாயிலாகப் பொதுமக்களே ஆதரிக்கலாம் என்று கங்காதரன் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன