செமினி, மார்ச் 2-

செமினி சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று காலை 8.00 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை சுமுகமாக நடைபெற்றது.

காலையில் வாக்களிப்பு மையங்களில் நிலைமை மந்தமாக இருந்தாலும் மதியம் 1.00 மணிக்குப் பின்னர் வாக்களிப்பு சுறுசுறுப்பாக இருந்தது. மாலை 3.30 மணி வரை சுமார் 65 விழுக்காட்டினர் வாக்களித்ததாக தகவல் கிடைத்துள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஐமான் சைனால் செமினியிலுள்ள எங்கு உசேன் இடைநிலைப்பள்ளியிலும் தேசிய முன்னணியின் வேட்பாளர் சகாரியா ஹனாபி கம்போங் செசாப்பான் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மண்டபத்திலும், பிஎஸ்எம் வேட்பாளர் நிக் அபிக் அப்துல் செமினி சமுக மண்டபத்திலும் வாக்களித்தனர்.

இத்தொகுதியில், 53,520 பதிவு பெற்ற வாக்களர்கள் இருக்கின்றனர். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமது நோர் (வயது 57) கடந்த ஜனவரி 11ஆம் தேதி மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இன்று இரவு 7.00 மணிக்கு பின்னர் இத்தேர்தலுக்கான முடிவு தெரியவரும்.