கோலாலம்பூர் மார்ச் 5
டத்தோஸ்ரீ நஸ்ரி தேசிய முன்னணியின் தலைமை செயலாளராக நியமிக்கப் பட்டது சட்டத்திற்கு புறம்பானது என மஇகா மற்றும் மசீச தலைவர்கள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
தேசிய முன்னணியின் தலைமை செயலாளராக நியமிக்கப்படுபவர் உச்ச மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும். அந்தவகையில் டத்தோஸ்ரீ நஸ்ரியின் நியமனம் குறித்து தேசிய முன்னணியின் முதன்மை உறுப்பு கட்சிகளான மஇகா – மசீச இணக்கம் தெரிவிக்கவில்லை என்ற தகவலையும் அந்த கூட்டறிக்கையை அக்கட்சி தலைவர்களும் கூறியுள்ளனர்.
தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடிதான் டத்தோஶ்ரீ நஸ்ரியை தலைமைச் செயலாளராக நியமித்தார். இதற்கு உறுப்பு கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவிக்காத நிலையில் அவரது நியமனம் செல்லாது என அவர்கள் கூறியுள்ளனர்.

தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளராக இருந்து கொண்டு அக்கட்சியின் முதன்மை உறுப்பு கட்சிகளாக இருக்கும் மஇகா – மசீச இரண்டு கட்சிகளையும் அவர் தொடர்ந்து சாடி வருகின்றார். இது தேசிய முன்னணியின் நிலைத்தன்மையை பாதிக்கின்றது என்பதை அனைவரும் உணர வேண்டும் என அந்த கூட்டறிக்கையில் மஇகா தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மசீச தலைவர் வி கா சியோங் ஆகிய இருவரும் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை கூடவிருக்கும் தேசிய முன்னணியின் உச்ச மன்றக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் என்ற அடிப்படையில் டத்தோஸ்ரீ நஸ்ரி கலந்து கொள்ளக் கூடாது. அப்படி அவர் இந்த உச்சம் பெற்ற கூட்டத்திற்கு தலைமை ஏற்றார் மலேசிய இந்திய காங்கிரசு மலேசிய சீன சங்கமும் இந்த உச்ச மன்றக் கூட்டத்தை புறக்கணிக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளின் கருத்திற்கு மதிப்பளிக்காமல் தேசிய முன்னணியின் உச்ச மன்றக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் என்ற முறையில் அவர் கலந்து கொள்ளும் பட்சத்தில் விபரீத முடிவுகளையும் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அந்தக் கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


