மியாமி, மார்ச்.16-
2022 ஆம் ஆண்டில் கத்தாரில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்கும் முயற்சியில் ஃபிபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் மேலும் ஓரடி முன்னேறியுள்ளது.
கத்தாருடன் இணைந்துப் போட்டியை நடத்தக் கூடிய நாடு அடையாளம் காணப்படும் பட்சத்தில் ஃபிபா தனது திட்டத்தை வெற்றிக்கரமாக நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஃபிபா தலைவர் கியானி இன்பென்டினோ மட்டுமே 48 நாடுகள் பங்கேற்கும் திட்டத்தை ஆதரித்து வந்தார்.
ஆயினும் வெள்ளிக்கிழமை மியாமியில் நடைபெற்ற ஃபிபா உச்சமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இன்பென்டினோவின் பரிந்துரைக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற விருக்கும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்க ஃபிபா முடிவெடுத்தப்போது, தென் அமெரிக்க மண்டலத்தைச் சேர்ந்த சில நாடுகள் 2022 ஆம் ஆண்டில் நடைபெறும் போட்டியிலே எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுத்ததாக இன்பென்டினோ தெரிவித்தார்.
எனவே அவர்களின் கோரிக்கையை ஃபிபா பரிசீலித்திருப்பதாக இன்பென்டினோ தெரிவித்தார். உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கும் பட்சத்தில் ஆட்டங்களின் எண்ணிக்கையும் 64 -ல் இருந்து 80 ஆக அதிகரிக்கும்.


