மெட்ரிட், ஆக.17 –

2017/18 ஆம் பருவத்துக்கான ஸ்பெயின் சூப்பர் கிண்ணத்தை ரியல் மெட்ரிட் கைப்பற்றியது. புதன்கிழமை சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 2 – 0 என்ற கோல்களில் தனது பரம வைரியான பார்சிலோனாவை வீழ்த்தியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆட்டத்தில் 3 – 1 என்ற கோல்களில் வெற்றி பெற்ற ரியல் மெட்ரிட், 5 – 1 என்ற ஒட்டு மொத்த கோல்களில் ஸ்பெயின் சூப்பர் கிண்ணத்தை வென்றது.

முதல் பாதி ஆட்டத்தின் 4 ஆவதுந் இமிடத்தில் மார்கோ அசென்சியோ ரியல் மெட்ரிட் அணியின் முதல் கோலைப் போட்டார். முதல் பாதி முடிவடையும் தருவாயில் கரீம் பென்சீமா , ரியல் மெட்ரிட்டின் இரண்டாவது  கோலைப் போட்டு அந்த அணியின் வெற்றியை உறுதிச் செய்தார்.

இந்த ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கேரத் பேல் களமிறக்கப்படவில்லை என்றாலும் ரியல் மெட்ரிட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது .

ரியல் மெட்ரிட் நிர்வாகியாக பொறுப்பேற்ற கடந்த 20 மாதங்களில் சினிடின் சிடான், அந்த அணிக்கு 7 ஆவது கிண்ணத்தை பெற்று தந்துள்ளார்.