செவ்வாய்க்கிழமை, ஜூலை 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனை பிரமிக்க வைக்கின்றது! -குலசேகரன் புகழாரம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனை பிரமிக்க வைக்கின்றது! -குலசேகரன் புகழாரம்

கோலாலம்பூர் ஜூன் 27-

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி உலகளாவிய நிலைகளில் நடைபெறும் போட்டிகளிலும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மிகச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் மகத்தான சாதனை நம்மை பிரமிக்க வைக்கின்றது என மனிதவள அமைச்சர் குலசேகரன் குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமை மாலை ஜெனிவாவில் இருந்து நாடு திரும்பிய அவர் அன்றைய தினம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஜார்ஜியாவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று வந்தடைந்த ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களை எதார்த்தமாக சந்திக்க நேர்ந்தது.

அண்மையில் ரவாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஜார்ஜியாவில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கிராமப்புற நடன போட்டியில் பங்கேற்று சிறந்த படைப்பிற்கான பரிசுகளையும் வென்று இருந்தனர்.

இதற்கு முன்னமே இவர்கள் உலகளாவிய போட்டியில் தனிச் சிறப்பு விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பிரதிநிதித்து உலகளாவிய நிலையில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற்ற ஒரே தமிழ்ப்பள்ளி என்ற பெருமையை ரவாங் தமிழ்ப்பள்ளி பெற்றிருக்கின்றது.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைப்பதற்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது என குலசேகரன் புகழாரம் சூட்டினார். கல்வி மட்டுமின்றி மாணவர்கள் புறப்பாட நடவடிக்கையிலும் சிறந்த அளவில் நிலையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற திட்டங்களுக்கு பெற்றோர்கள் வழங்கும் ஆதரவு தான் இந்த வெற்றிக்கு காரணம் என்றார் அவர்.

வரும் காலங்களிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச்சிறந்த அடைவு நிலையை பதிவு செய்ய வேண்டும். இது மலேசிய இந்தியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும் என அவர் தெரிவித்தார். இந்த மாணவர்களின் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் அவர் வாழ்த்தினார். குறிப்பாக ஆசிரியர் ரீத்தா மாணவர்களுக்கு நடன பயிற்சி வழங்கிய நடனக்குழுவின் பயிற்றுனர் சசி காளிமுத்து ஆகியோரின் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன