புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > மகளை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற தாயின் ஏக்கம் புரியவில்லையா? அருண் துரைசாமி கண்ணீர்
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

மகளை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற தாயின் ஏக்கம் புரியவில்லையா? அருண் துரைசாமி கண்ணீர்

கோலாலம்பூர் ஜூலை 26-

10 ஆண்டுகளுக்கு மேலாக தமது மகளை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற தாய் இந்திரா காந்தியின் ஏக்கம் யாருக்கும் புரியவில்லையா? என இந்திரா காந்தி மகள் மீட்புக் குழுவின் தலைவர் அருண் துரைசாமி கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார்.

மகளை தாயிடம் ஒப்படைக்க வேண்டும். பத்மநாதன் என்ற இயற்பெயர் கொண்ட முகமட் ரிடுவானை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத தொடர்ந்து ஏமாற்றத்தை அளிப்பதாக அவர் கூறினார்.

பிரசன்னா 11 மாத குழந்தையாக இருந்தபோது பத்மநாதன் அவரை கடத்திவிட்டார். தற்போது 11 வயதாகும் அந்த குழந்தையை பார்ப்பதற்காக இதுவரையில் இந்திராகாந்தி தவித்துக் கொண்டு இருப்பதாகவும் அருண் துரைசாமி தெரிவித்தார்.

இது சமய ரீதியிலான சிக்கல் கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒரு தாயின் ஏக்கம் தான் இங்கு பிரதிபலிக்கின்றது. தமது மகளை பார்க்க வேண்டும் என ஏங்கும் ஒரு தாய் இத்தனை ஆண்டுகளாக எவ்வளவு பெரிய மன வேதனையை அனுபவித்து வந்து இருப்பார் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிரசன்னா தாயிடம் ஒப்படைக்கப்பட்டார் அவர் மதமாற்றம் செய்யப்படுவார் என்ற செய்தியும் இங்கு பரப்பப்படுகின்றது. பத்மநாதன் அவரை அழைத்துச் சென்றது முதல் அவர் இஸ்லாம் மதத்தை தழுவி இருக்கிறார் என்பதை இங்கு அனைவரும் அறிவோம். அவர் எந்த மதத்தில் தொடர வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய உரிமை அவருக்கு உண்டு. பிரசன்னா எந்த மதத்தில் தமது வாழ்க்கையை தொடர வேண்டும் என நினைக்கிறாரோ அவர் அதனைதொடரலாம். ஆனால் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற தாயின் எண்ணத்தை இந்த ஒரு வாதத்திற்காக பலியாகிவிடக் கூடாது.

கிளாந்தான் மாநிலத்தில்தான் முகமட் ரிடுவான் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவரது இரண்டாவது மனைவியை விசாரித்தால் கூட பிரசன்னா எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து விடலாம். மூன்று குழந்தைகளுடன் பத்மநாதன் அங்கு வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு பாஸ் கட்சியின் ஆதரவு குழு ஒன்று ஆதரவு வழங்குகின்றது. அதோடு ஜாகிர் நாயக் ஆதரவாளர்களும் முஹம்மது ரிடுவான் என அழைக்கப்படும் பத்மநாபனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக அறியப்பட்டது தொடர்ந்து அது குறித்து போலீஸ் புகார் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அருண் துரைசாமி தெரிவித்தார்.

மகளை பார்க்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை அதை தயவு செய்து நிறைவேற்றுங்கள் என இந்திராகாந்தி செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறினார். மலேசிய இந்து சங்கம் தலைமையகத்தில் நடைபெற்ற இதன் செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ வைத்தியலிங்கம் கலந்து கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன