கிள்ளான் ஜூலை 26-

ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினரும், கோத்தா ராஜா ம.இ.கா தொகுதி காங்கிரஸின் தலைவருமான டத்தோ ஆர். எஸ் மணியம் அவர்களின் நல்லுடல் ம.இ.கா தலைவர்களின் கண்ணீர் அஞ்சலியோடு கிள்ளான் சிம்பாங் லீமா மின் சுடலையில் தகனம் செய்யப்பட்டது.

ம.இ.கா. தேசிய தலைவரும் மேலவை தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், ம.இ.காவின் துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர்களான செனட்டர் டத்தோ டி.மோகன், டத்தோ டி.முருகையா, ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர்கள், தொகுதி தலைவர்கள், கிளை தலைவர்கள் மற்றும் பொது இயக்கங்களைச் சேர்ந்தர்கள் என திரளானோர் ஆர். எஸ்.மணியம் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

ம.இ.கா. முன்னாள் தேசியத் தலைவர் துன் ச. சாமிவேலு, அவரது புதல்வர் டத்தோஸ்ரீ வேள்பாரி, அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ ஆகியோரும் ஆர் எஸ் மணியம் அவர்களின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ம.இ.கா.வின் நீண்டகால சேவையாளரான ஆர்எஸ் மணியம் நெஞ்சுவலி காரணமாக புக்கிட் ரீமாவ்விலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். நல்ல பொது சேவையாளராகவும் சிறந்த தொண்டராகவும் விளங்கி வந்த ஆர் எஸ் மணியம் கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி நடைபெற்ற 14வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது மனதில் பட்டதை துணிச்சலாக வெளிப்படுத்தக்கூடியவராகவும் அவர் விளங்கி வந்தார் . கட்சியின் அனைத்து நடவடிக்கைளிலும் அவர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு சேவையாற்றி வந்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சி இல்லாவிட்டாலும் தேசிய முன்னணி தலைவர்களுடன் தமக்கிருந்த அணுக்கமான நட்புறவை பயன்படுத்திக்கொண்டு கோத்த ராஜா தொகுதியில் தம்மால் முடிந்த அளவுக்கு ம.இ.கா. உறுப்பினர்களுக்கு சிறந்த சேவையை ஆர்எஸ் மணியம் வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.என்.பி எனப்படும் தேசிய மின்சார வாரியத்தின் முன்னாள் பணியாளருமான ஆர். எஸ் மணியம் விளையாட்டுத்  துறையிலும் ஈடுபாடு கொண்டவராக விளங்கி வந்தார். 1975 ஆம் ஆண்டு மூன்றாவது உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட மலேசிய குழுவின் ரிசர்வ் ஆட்டக்காரர்கள் பட்டியலிலும் ஆர்.எஸ்.மணியம் இடம்பெற்றிருந்தார்.