சுங்கைப்பட்டாணி, ஜூலை 29-
அந்நிய நாட்டு குப்பைகளை இறக்குமதி செய்வதை நிறுத்தக் கோரும் வகையில் கெடா, சுங்கைப்பட்டாணியில் 5,000 பேரிடம் கையெழுத்துகளைச் சேகரிக்கும் இயக்கத்தை கெராக்கான் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் கடந்த சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
இரு வாரங்களுக்கு முன்பு சுங்கைப் பட்டாணியில் ஏற்பட்ட காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக மூச்சுக் குழாய் அலற்சியினால் அவதியுற்ற ரெனி இங் காய் ஸென் எனும் 16 வயது இளம் பெண்ணை டோமினிக் லாவ் நேரில் சென்று கண்டார். இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணும் பொருட்டு இவ்வியக்கத்தை இவர் தொடக்கினார்.
காற்றுத் தூய்மைக்கேடு விவகாரத்திற்குத் தீர்வு காணும் நடவடிக்கை எதனையும் கெடா மாநில அரசு, அமைச்சர் அல்லது அமைச்சரவை எடுக்காதததைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பைச் செய்தார். அந்நிய நாட்டில் இருந்து குப்பைகளை நம் நாட்டிற்குள் இறக்குமதி செய்யும் மாநில அரசின் நடவடிக்கையை நிறுத்தக் கோருவதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும் என்றார் அவர்.
சுற்றுச் சூழலின் தரத்தைப் பாதிப்பதோடு மக்கள் குறிப்பாக சுங்கைப்பட்டாணி வாழ் மக்களின் சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் குப்பை இறக்குமதி நடவடிக்கையை கெராக்கான் வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் அவர் சொன்னார். அதே வேளையில், இன்னும் இரண்டு வாரங்களில் இவ்விவகாரம் மீது கெடா மாநில அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காவிடில், இந்த இயக்கத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதோடு கெடா சுல்தானிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்படும் என்று டோமினிக் லாவ் நினைவுறுத்தினார்.
“மாநில மக்கள் குறிப்பாக சுங்கைப்பட்டாணி மக்களுக்கு பாதுகாப்பான ஓர் இடமாக கெடா மாநிலம் இல்லை என்பதை மாநில சுல்தானிடம் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். இதன் மூலம் மாநில அரசு அல்லது மத்திய அரசாங்கம் அந்நிய நாடுகளில் இருந்து குப்பைகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை நிறுத்திக் கொள்ளும் என நம்புகிறோம். இம்மாநிலம் குப்பைக் கூளங்கள் நிறைந்த மாநிலமாக உருமாறுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை” என்றார்.
தவிர, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ அல்லது நாட்டிற்குள் குப்பைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளித்த அமைச்சருக்கோ மரண தண்டனை அளிக்கப்படுமா என்று டோமினிக் லாவ் வினவினார். தண்ணீர் தூய்மைக்கேட்டிற்குக் காரணமான நபருக்கு சட்டப்படி அபராதம் அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று நீர் வள துறை அமைச்சர் நேற்று வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி டோமினிக் லாவ் மேற்கண்ட கேள்வியை எழுப்பினார்.
இதே சட்டத்தைப் பயன்படுத்தி அந்நிய நாட்டு குப்பைகளுக்கு அனுமதி அளித்த அமைச்சருக்கு தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படுமா? அந்நிய குப்பைகள் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததன் மூலம் நாட்டு மக்களின் சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
அமைச்சர், அமைச்சரவை மற்றும் இன்றைய அரசாங்கத்தின் மீது எந்தச் சட்டம் பாயும் என்றும் அவர் வினவினார். மூச்சுக் குழாய் அலற்சி காரணமாக தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ரெனி இங் கு ஸென் எனும் இளம் பெண்ணை டோமினிக் லாவ் சனிக்கிழமை மீண்டும் சென்று கண்டார்.
நமது பிள்ளைகள் பாதுகாப்பான சுற்றுச் சூழலில் கல்வி கற்பதை உறுதிப்படுத்த சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் எல்லா நடவடிக்கைகளையும் மாநில அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நெருக்குதல் அளிக்கும்படி அனைத்து தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டார்.


