பெட்டாலிங் ஜெயா ஜூலை 29-
பத்து நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆயிரம் இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மலேசியாவில் செயல்படும் முதன்மை கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் புத்ரா இண்டலெக் உலகளாவிய கல்லூரி புதிய முயற்சியை முன்னெடுக்கின்றது. அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் இந்த நடவடிக்கைக்கு அடித்தளம் அமைப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் தோற்றுநர் டாக்டர் பரதன் தெரிவித்தார்.
கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு எதிர்காலம் உண்டு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இதனால் நமது பல்கலைக்கழகத்தில் தொழில் திறன் சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவதை டாக்டர் பரதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எஸ் பி எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெறாத மாணவர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு தொழில் திறன் பயிற்சிகளை வழங்கி, வாழ்க்கையில் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாம் செயற்படுகின்றோம். தற்போது பத்து நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆயிரம் இந்தியர்களை இந்த திட்டத்தின் வழி இணைப்பதற்கு பிரபாகரன் முன்வந்துள்ளார்.

அவருடன் இணைந்து இம்மாணவர்களின் மேம்பாட்டிற்கு துணைபுரிவது மகிழ்ச்சி அளிப்பதாக டாக்டர் பரதன் தெரிவித்தார். அவர்களுக்கான கல்வி கடன் உதவிகளை எங்கிருந்து பெற முடியும் என்பது குறித்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் அதிகமான இளைஞர்கள் பங்கு பெறும் பட்சத்தில் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சரிடம் மானியம் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமா என்பது குறித்தும் நாங்கள் ஆலோசனை செய்வோம் என்றார் அவர்.
17 வயது தொடங்கி 40 வயது வரையிலான இந்திய இளைஞர்களை இந்த திட்டத்தின் வழி இணைத்துக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் அனைவரும் பத்து நாடாளுமன்றத் தொகுதியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னெடுக்கின்றார். தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் சமூக சேவை மையங்களாக மாற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கின்றது. அதற்கு புத்ரா இண்டலெக் உலகளாவிய கல்லூரி சிறந்த உதாரணமாக இருக்கின்றது என பிரபாகரன் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து சமுதாய சேவையில் ஈடுபட்டு வரும் இப்பல்கலைக்கழகம் பத்து நாடாளுமன்றத்தில் உள்ள இந்தியர்களின் மேம்பாட்டிற்கு உதவ முன் வந்திருப்பது தமக்குப் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். இந்த நடவடிக்கை நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


