கோலாலம்பூர் ஜூலை 31-
நாட்டின் 16 ஆவது மாமன்னராக சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பிலா ஷா அரியணையில் அமர்ந்தார். மலாய் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு சடங்கின்படி அவரது அரியணை அமரும் நிகழ்வு நடைபெற்றது.
60 வயதான அப்துல்லா மாமன்னருக்கான சடங்குப் பூர்வமான அதிகாரப்பூர்வ உடை அணிந்திருந்தார். நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்க கூடிய மற்றும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய விவகாரங்களை எழுப்புவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென மாட்சிமை தங்கிய பேரரசர் அப்துல்லா தமதுரையில் கேட்டுக்கொண்டார்.
எல்லா இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களிடையே ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதற்கு தம்மால் முடிந்தவரை சிறப்பாக பணியாற்ற போவதாக பேரரசர் உறுதியளித்தார். மக்களுக்கு முன்னுரிமை வழங்குவேன். வயதானவர்களை மதிப்பேன் மற்றும் இளையோரை கௌரவிப்பேன் என அவர் தெரிவித்தார்.
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, ஆட்சியாளர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட அழைக்கப்பட்ட பிரமுகர்கள் மாமன்னரின் அரியணை அமரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் ஐக்கிய அரபு சிற்றரசு பட்டத்து இளவரசர் ஷேய்க் முகமட் ஷாயிட், புருணை சுல்தான் ஹசனல் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் .
தமது தந்தையருக்கு பதில் ஜனவரி 15ஆம் தேதி பகாங் மாநிலத்தின் ஆறாவது சுல்தானாக சுல்தான் அப்துல்லா பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற ஆட்சியாளர்களின் சிறப்புக் கூட்டத்தில் அவர் 16வது மாமன்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோடு ஜனவரி 31ஆம் தேதி அவர் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.


