கோலாலம்பூர், ஜூலை.31 –

கடற்படை பயிற்சி மாணவன் சுல்பர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னைன் கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் 18 மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக் கழக மாணவர்கள், தங்களை தற்காத்து வாதிட கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு போதிய முகாந்திரங்களைக் கொண்டிருப்பதை வாதித் தரப்பு நிரூபித்தப் பின்னர் நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லா இவ்வாறுத் தெரிவித்திருக்கிறார்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்போரில், 23 வயதுடைய முஹமட் அக்மால் அகிப் மட்டுமே, தற்காப்பு வாதம் புரியாமல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, விடுதலைச் செய்யப்பட்டிருக்கின்றார்.

சுல்பர்ஹான் ஒஸ்மானைக் காயப்படுத்திய குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்கி இருந்தார்.
சுல்பர்ஹா-னை கொலைச் செய்வதற்கு உடனிருந்த மற்றும் கொலைச் செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருக்கும் முஹமட் அக்மால் சுஹாய்ரி
முஹமட் அசாமுடின் மாட் சோபி, முஹமட் நஜிப் முஹமட் ராசி, முஹமட் அபிப் நஜ்முடின், முஹமட் சோப்ரி சப்ரி, அப்துல் ஹாக்கிம் முஹமட் அலி ஆகியோர் உட்பட 18 பேர் தங்களைத் தற்காத்து வாதம் புரியுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

23 வயதுடைய அவர்கள் அனைவரும், கடந்த 2017 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி காலை 4.45 முதல் 5.45 மணிக்கு உட்பட்டு அந்த பல்கலைகழகத்தில், ஜெபாட் மாணவர்கள் தங்குமிடத்தில், இக்குற்றத்தைப் புரிந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், கட்டாய மரணத் தண்டனை விதிக்க வகைச் செய்யும், குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302 மற்றும் 109 கீழ் அந்த அறுவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.