Homeஅரசியல்ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்தும் கொள்கையை மீட்டுக்கொள்வீர்; அரசாங்கத்திற்கு கணபதிராவ் வலியுறுத்து

ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்தும் கொள்கையை மீட்டுக்கொள்வீர்; அரசாங்கத்திற்கு கணபதிராவ் வலியுறுத்து

ஷா அலாம், ஆக 6-

அடுத்த ஆண்டிலிருந்து நான்காம் வகுப்புக்கான தேசிய மொழி பாடபுத்தகத்தில் ஜாவி மொழியை அறிமுகப்படுத்துவது என கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையை சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் கடுமையாக சாடினார்.

இந்த முடிவுக்கு பல தரப்பினர் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த போதிலும் பிரதமர் உட்பட கல்வி அமைச்சரும் இந்த கொள்கையை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை அடுத்தாண்டு தொடரும் என கூறியிருப்பது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிப்பதாக கணபதிராவ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மலாய்க்காரர்  அல்லாத மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கொள்கை அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்தக் கொள்கைக்கு என்ன காரணம் அல்லது அதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது சிரமமாக உள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு சரியான நோக்கம் தெரியவில்லை. காட் எனப்படும்  இந்த வரைகலை அல்லது ஜாவி எழுத்துக்கள் தேசியப் பள்ளிகளில் இஸ்லாமிய பாடத்தின்போது கற்றுத் தரப்பட்டன. எனவே இதனை நான்காம் வகுப்புக்கான  தேசிய மொழி பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக விரிவுபடுத்த வேண்டிய அவசியம் என்னவென்று கணபதிராவ் வினவினார்.

இந்த எழுத்துக்களை மாணவர்கள் கட்டாயமாக படித்து கொள்வதால் பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான குறிப்பிடத்தக்க நன்மைகள் மக்களுக்கு அல்லது நாட்டிற்கு கிடைக்கப்போவதில்லை.  கலாச்சார நன்மைகள் கிடைக்கக்கூடும் என கல்வி அமைச்சு கூறினாலும் இக் கருத்தை ஏற்க முடியாது.  கலாச்சாரமும் பாரம்பரியமும் எந்த ஒரு நபரிடமும் கட்டாயமாக புகுத்தக்கூடாது.

அதோடு ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்தும்படி எந்த ஒரு தரப்பினரும் அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்க வில்லை.இந்த கொள்கையை அமல்படுத்துவதற்கு முன் கல்வி அமைச்சு முழுமையான ஆய்வை மேற்கொண்டதா? இந்த விவகாரத்தில் தமிழ் மற்றும் சீன பள்ளிகளின் கருத்துக்கள் பெறப்பட்டதா?. அவர்களுடன் கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டதா? என்றும் கணபதிராவ் வினவினார்.

இதுகுறித்த ஆலோசனைகள் அமைச்சரவையிடம் விவாதிக்கப்பட்டதா?. இது போன்ற கேள்விகளை பொதுமக்கள் கேட்டபோதிலும் கல்வி அமைச்சர் பொதுமக்களின் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை.

ஐசெட்  சாசனத்தில் கையெழுத்திடுவது, டோல் கட்டணத்தை ரத்து செய்வது மற்றும் கடந்த 14வது பொதுத் தேர்தலின்போது நம்பிக்கை கூட்டணி வழங்கிய பல்வேறு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கும்போது ஜாவி எழுத்தை அமல்படுத்தும் கொள்கை உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சரும் நம்பிக்கை  கூட்டணி அரசாங்கமும் பிடிவாதமாக இருக்க வேண்டிய அவசியம் ஏன் என்று  பொது மக்கள் கேட்கின்றனர்.

மாணவர்களுக்கான காலணிகள், காலுறைகளில் கூடுதல் கவனம் செலுத்தும் கல்வி அமைச்சர்  ஜாவி எழுத்துக்களை அறிமுகப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவதால்  குறிப்பிடத்தக்க விளைவுகள் மாணவர்கள் மத்தியில் ஏற்படப்போவதில்லை. ஏற்கனவே மாணவர்கள் தேவையற்ற நடவடிக்கைகள் மற்றும் அதிகமான பாடங்களால் கூடுதல் சுமைகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலைமையில் கலை மற்றும் பண்பாடு என்ற பெயரில் மற்றொரு எழுத்துக் கலையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி கட்டாயமாக அவர்கள் அதனை கற்கும்படி வலியுறுத்தப்படுவது நியாயமான ஒரு நடவடிக்கையாக தெரியவில்லை.. இதனால் இளைய சமூகத்தினரிடம் நாம் விவேகமாக நடந்து கொள்கிறோமா என்ற கேள்வியும் எழுவதாக கணபதிராவ் தெரிவித்துள்ளார்.\

இந்தக் கொள்கையின் பின்னணியில் இருக்கும் தலைமறைவான நோக்கம்தான் என்ன?. இஸ்லாமிய கலாச்சார அம்சங்களுக்கு திடீரென நாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன்?

சீன எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பெரும்பாலோர் கேள்வி எழுப்ப வில்லை என்பதால் தற்போது ஜாவி எழுத்துக்களை அமல்படுத்தும் நடவடிக்கை குறித்து மக்கள் கேள்வி எழுப்பக் கூடாது என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருக்கிறார்.

பிரதமர் இவ்வாறு சுட்டிக் காட்டி இருக்க கூடாது. சீன மற்றும் தமிழ் எழுத்துக்கள் தாய்மொழி பள்ளிகளில்தான் பயன்படுத்தப்படுகின்றன. நாடு முழுவதிலும் கட்டாய பாடமாக இது இல்லை. எனவே சீன மற்றும் தமிழ் எழுத்துக்களை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் கணபதிராவ் வலியுறுத்தினார்.

மேலும் அனைத்து பள்ளிகளிலும் ஜாவி  எழுத்துக்களை போதிக்கக் கூடிய ஆற்றல்  தேசியமொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடம்  இருக்கிறதா என்பதும் ஒரு கேள்விக்குறியாக உள்ளது. ஜாவி எழுத்தை போதிக்க முடியாததால் தேசிய மொழியில் சிறந்த ஆற்றல் பெற்ற ஆசிரியர்கள் எதிர்காலத்தில் ஓரம் கட்டப்படலாம்.

எந்த ஒரு கொள்கைகளை அறிமுகப் படுத்துவதற்கு முன்னர் அது மக்களுக்கு குறிப்பாக அனைத்து இனம் மக்களுக்கும் பயன்தரக்கூடியதா என்பதை அரசாங்கம் முன்கூட்டியே ஆராய வேண்டும். எனவே ஜாவி மொழியை அமல்படுத்தும் விவகாரத்தில் அரசாங்கம் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என கணபதிராவ் கேட்டுக்கொண்டார்.

spot_img

latest articles

explore more