புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > கைகலப்பிற்கும் ஆலயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை! – ஷர்மிளா
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கைகலப்பிற்கும் ஆலயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை! – ஷர்மிளா

பெஸ்தாரி ஜெயா, ஆகஸ்ட் 8-

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெஸ்தாரி ஜெயா சுங்கை டாரா வட்டாரத்தில் நிகழ்ந்த இரு கும்பல்களுக்கிடையிலான மோதலுக்கும் அருள்மிகு ருத் ராமா காளியம்மன் ஆலயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஆலயத் தலைவர் ஷர்மிளா தேவி தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 4ஆம் தேதி இரவு 8 மணியளவில் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கை துண்டானது. அதில் போலீஸ்காரருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதன் தொடர்பில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ காளியம்மன் ஆலய திருவிழாவில் ரத ஊர்வலத்தின்போது கூடாரம் அமைப்பதில் மோதல் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவத்திற்கு ஆலய திருவிழாவிற்கு துளியும் தொடர்பில்லை என்று ஷர்மிளா தேவி அதன் தொடர்பில் மறுப்பு தெரிவித்தார்.

ஜூலை மாதம் தொடங்கி இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகின்றது. அதன் ஓர் அங்கமாக ரத ஊர்வலம் நடைபெற்றது. சம்பவ தினத்தன்று இரவு 8 மணிக்கு ஆலயத்திலிருந்து ரதம் கிளம்ப வேண்டும். ஆனால் அந்நேரத்தில் சுங்கை டாரா சாலையில் சண்டை சச்சரவாக இருக்கிறது என்று ஆலய நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் நேரம் கடத்தி 9 மணிக்குத்தான் ஆலயத்தில் இருந்து ரத்தம் புறப்பட்டது என அவர் மேலும் கூறினார்.

ஆலயத்திலிருந்து சுங்கை டாரா பகுதிக்கு செல்ல மூன்று மணி நேரம் ஆகும். ரதம் அவ்வழியில் செல்லும் போது அப்பகுதியில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ரத ஊர்வலத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த குண்டர் கும்பல் சண்டையில் ஆலயத்தை சம்பந்தப்படுத்தியதன் தொடர்பாக ஆலய நிர்வாகம் போலீஸ் புகார் செய்துள்ளது. ரதத்திற்கும் ஆலய பக்தர்களுக்கும் எந்தவித பிரச்சனையும் அங்கு ஏற்படவில்லை என்பதை செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஷர்மிளா விளக்கமளித்தார்.

காவல்துறையினர் ஆலயத்திற்கு வந்து ஆலய நிர்வாகத்திடம் விளக்கம் பெற்றதோடு ஆலய பெயர் இதில் தொடர்புபடுத்தி அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர். கடந்த 12 ஆண்டுகளாக இவ்வாலயத்தில் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

இதுவரையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது இல்லை அது மட்டுமின்றி ஒவ்வொரு விழாக்களின் போதும் அதற்கான உரிமம் பெறபட்டதையும் அவர் தெரிவித்தார். இம்மாதம் 13-ஆம் தேதி வரை ஆலயத்தில் திருவிழா, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன பக்தர்கள் வழக்கம்போல ஆலய விழாக்களில் கலந்து கொள்ளலாம் என ஷர்மிளா தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன