வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > எறிபந்து விளையாட்டு தாக்கத்தை ஏற்படுத்தும்! டத்தோ டி மோகன் நம்பிக்கை
உலகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

எறிபந்து விளையாட்டு தாக்கத்தை ஏற்படுத்தும்! டத்தோ டி மோகன் நம்பிக்கை

கோலாலம்பூர் ஆகஸ்டு 9-

உலக ரசிகர்களை ஈர்த்த விளையாட்டுகளின் வரிசையில் எறிபந்து விளையாட்டு நிச்சயம் இடம்பெறும் என செனட்டர் டத்தோ டி மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆசிய எறிபந்து விளையாட்டு கூட்டமைப்புடன் இணைந்து மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார அறவாரியம் மலேசியாவில் இந்த போட்டி விளையாட்டை தொடங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதன் முன்னோட்டமாக இந்தியாவின் முன்னணி எறிபந்து விளையாட்டாளர்களைக் கொண்டு மலேசிய விளையாட்டாளர்கள் கலந்துகொள்ளும் முன்னோட்டப் போட்டி சனிக்கிழமை நடைபெறவிருக்கின்றது. இந்தப் போட்டியில் மூன்று குழுக்கள் கலந்து கொள்ளும் வேளையில் ஆண்கள் குழுவையும் அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெறும் என மலேசிய இந்திய காங்கிரசின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டத்தோ டி.மோகன் கூறினார்.

சுபாங் ஜெயா எம்பிஎஸ்ஜே 3கே  அரங்கில் இந்த முன்னோட்ட போட்டி நடைபெற இருக்கின்றது. இதற்கு மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பிரிவு விளையாட்டு பகுதியும் முழு ஆதரவு வழங்கி இருப்பதாக மோகன் கூறினார்.

மலேசிய எறிபந்து அறவாரியம் தொடங்கப்படும். இது இந்தியர்கள் சார்ந்த விளையாட்டாக மட்டுமில்லாமல் மலேசியர்கள் அனைவரும் பங்கு பெறும் விளையாட்டாக உருவகம் காணும் என டத்தோ டி மோகன் நம்பிக்கை தெரிவித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி இடம் பெற்றதைப் போல ஒரு நாள் இந்த எறிபந்து போட்டியும் இடம்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எறிபந்து விளையாட்டு அறிமுகம் கண்டு தற்போது அனைவரும் விளையாடக்கூடிய விளையாட்டாக உருமாறி உள்ளது என ஆசிய எறிப்பந்து கூட்டமைப்பின் செயலாளர் எம்.மணி தெரிவித்தார்.

1950ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்த விளையாட்டு தொடங்கியது. பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு தற்போது இருபாலரும் விளையாடக்கூடிய விளையாட்டாக உருமாற்றம் கண்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட ஆசியாவில் உள்ள 9 நாடுகளில் இந்த விளையாட்டு உள்ளது. பத்தாவது நாடாக மலேசியாவும் இணைந்து கொண்டது என அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆசிய போட்டியில் எறி பந்து விளையாட்டை அறிமுகப்படுத்திய பிறகு ஒலிம்பிக் வரை இப்போட்டியை கொண்டு செல்லும் திட்டத்தை தங்களது கூட்டமைப்பு கொண்டுள்ளதாகவும் மணி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன