முகப்பு > அரசியல் > ஒற்றுமை அமைச்சர் மலேசியத் தூதருடன் புதுடில்லியில் சந்திப்பு!
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஒற்றுமை அமைச்சர் மலேசியத் தூதருடன் புதுடில்லியில் சந்திப்பு!

புதுடில்லி, ஆக.14 –

இந்தியாவிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, இந்தியாவிற்கான மலேசியத் தூதர் டத்தோ ஹிடாயாட் அப்துல் ஹமிடியை சந்தித்துப் பேசினார்.

புதுடில்லி சாணக்கியாபுரியில் அமைந்துள்ள மலேசியத் தூதரகத்தில்  புதன்கிழமை இந்திய நேரப்படி காலை 10:30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

குறிப்பாக தூதரக வரலாறு, இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவு, கல்விச் சுழல் மற்றும் வாய்ப்பு, இரு நாடுகளுக்கிடையே மேம்பட்டுள்ள சுற்றுலாத் துறை குறித்த தகவல் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்தெல்லாம் அமைச்சருக்கு துணைத் தூதர் நோர் அஸ்ஸாம் முகமட் இட்ரிஸ் விளக்கமளித்தார்.

தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமுர்த்தி மேற்கொண்டுள்ள அதிகாரத்துவ பயணத்தில் இந்தச் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பின்போது, துணைத் தூதர் நோர் அஸ்ஸாம் முகமட் இட்ரிஸ், அதிகாரிகள் எஸ்ரல் உஸைமி (பொருளாதாரப் பிரிவு), டாக்டர் அகமட் ஷாம் பஹாரின்(பாதுகாப்புப் பிரிவு), ரோஸ்மாடி முகமட் டோம்(குடிநுழைவு), ஆலோசகர் முகமட் ஹஃபிஸ் ஒத்மான், முதல் நிலை செயலாளர் இப்ராகிம் ஹெல்மி அப்துல்லா ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இன்று(ஆகஸ்ட் 14) மாலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியத்தை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி சந்திக்கிறார். நாளை இந்தியாவின் 72-ஆவது சுதந்திர தினம் கொண்டாட இருக்கும் வேளையில் இச்சந்திப்பு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன