வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஜாகிர் நாயக் நாட்டை விட்டு வெளியேறிதான் ஆக வேண்டும்! – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஜாகிர் நாயக் நாட்டை விட்டு வெளியேறிதான் ஆக வேண்டும்! – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 14-

மலேசிய இந்துக்கள், தமிழர்களின் விசுவாசம் குறித்து கேள்வி எழுப்பிய சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாயக் மலேசியாவை விட்டு வெளியேறி தான் ஆக வேண்டும் என நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீரை காட்டிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மீது மலேசிய இந்துக்கள் அதிக விசுவாசம் கொண்டு உள்ளார்கள் என ஜாகிர் நாயக் கூறிய கருத்தை அவர் முற்றிலும் நிராகரித்தார். ஜாகிர் நாயக் மலேசியாவில் வசிப்பதற்கு மட்டுமே அனுமதி வழஙப்பட்டது. அவர் மலேசிய குடியுரிமை பெற்றவர் அல்ல. ஆனால் இங்கு உள்ள இந்துக்கள் தமிழர்கள் நான்கு ஐந்து தலைமுறைகளாக இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றார்கள். அதனால் எங்களின் விசுவாசம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு அவருக்கு உரிமை இல்லை என்றார் அவர்.

தொடர்ந்து சர்ச்சைகளை எழுப்பி கிளப்பி அவர் தற்போது சீனர்கள் இந்த நாட்டின் விருந்தினர்கள் என குறிப்பிட்டுள்ளார். தாம் வெளியேறுவதற்கு முன்னதாக சீனர்கள் வெளியேறுவது தான் சிறந்தது என்றும் கூறி உள்ளார். மலேசியா பல்லின மக்கள் வாழும் நாடு.  மத இன ரீதியில் இங்கு நாம் அனைவரும் பிரிந்திருந்தாலும் சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் நம்மை மலேசியர்கள் என்று அடையாளப்படுத்துகிறது. நாம் அனைவரும் பன்முகம் கொண்ட நாட்டின் குடிமக்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜாகிர் நாயக் அனைத்தும் குறித்து விவாதிப்பதற்கு தான் இங்கு வசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதா? என்ற கேள்வியையும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் முன்வைத்திருக்கிறார். மலேசியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையிலான பிளவுகளை தூண்டும் நோக்கத்துடன் தேச துரோக அறிக்கைகளை வெளியிடும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை.

இதுபோன்ற அறிக்கைகளை நாம் அனுமதித்தால் இது மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும். இன மற்றும் மத பிரிவினைக்கும் வழிவகுக்கும் என தாம் அஞ்சுவதாக சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கூடிய அமைச்சரவையில் சக இந்திய அமைச்சர்களுடன் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினோம். ஜாகிர் நாயக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் மலேசியாவில் தொடர்ந்து நிலைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் டாக்டர் மஹாதீர் முடிவு எடுக்கும் பட்சத்தில் எங்களது நிலைப்பாட்டையும் கருத்தில் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டார்.

சமய ரீதியிலான கருத்துக்களை அவர் பேசக்கூடாது என்ற வரையறை அவருக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் அவர் கூறியிருந்த கருத்து அந்தக் கோட்டை அவர் கடந்து விட்டார் என்பதை காட்டுகின்றது என பிகேஆர் கட்சியின் உதவி தலைவரும் கோலா லாங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன