சனிக்கிழமை, ஜனவரி 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை அதிகமான இளம்  இந்திய தொழில் முனைவர்களை உருவாக்கும்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை அதிகமான இளம்  இந்திய தொழில் முனைவர்களை உருவாக்கும்!

கோலாலம்பூர், நவ. 27-

இந்நாட்டில் இந்தியர்களின் வருமானத்தை உயர்த்துவதற்குச் சிறந்த வழி வர்த்தகமே. இதன் அடிப்படையில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவ கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை பயிற்சி திட்டங்கள், வழிகாட்டி கருத்தரங்குகள் உள்ளிட்ட  பல்வேறு வகையான  நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டது.

“ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி இருப்பது எந்த அளவு முக்கியமோ அது  போலவே ஒரு வீட்டிற்கு ஒரு வர்த்தகர்  அவசியம் இருக்க  வேண்டும். இதன் வாயிலாகவே இந்தியர்களின் பொருளாதார நிலை உயரும்” என்று   கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை மற்றும் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர். ராமநாதன் தெரிவித்தார்.

தலைநகர், தாமான் தாசேக் பெர்டானா, ரோயல் லேக் கிளப்பில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபையும்  மலேசிய இந்திய வர்த்தக தொழிற்துறை சம்மேளனமும் கூட்டாக  ஏற்பாடு செய்த   தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்ச்சியில்  வரவேற்புரை ஆற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

75 விழுக்காட்டினர் மாதம் 3,500 வெள்ளிக்குக் குறைவான சம்பளத்தைப் பெறுகின்றனர். அதே சமயம், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள  இந்தியர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு. இந்நிலை மாற வேண்டும் என்பதற்காக  50 இந்திய இளம் தொழில் முனைவர்களை உருவாக்கத் தாங்கள் திட்டமிட்டிருப்பதாகவும்  இதற்கு மித்ரா  நிதியுதவி அளித்திருப்பதாகவும்  ராமநாதன் விவரித்தார்.

இந்நிகழ்ச்சியை மூலத் தொழில் துறை அமைச்சர் திரேசா கோக் குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

மலேசியாவுக்கான இந்திய துணைத் தூதர் அர்ச்சனா நாயர், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, புக்கிட் காசிங் சட்ட மன்ற உறுப்பினர் ராஜிவ் ஆகியோர்  இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்தனர்.

ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த சுமார் 50 சிறார்கள் பரிசு பொருள் மற்றும் அன்பளிப்பு வழங்கி மகிழ்விக்கப்பட்டனர்.

சுவைமிகு உணவு வகைகள் மற்றும் உள்ளூர் கலைஞர்களின் செவிக்கினிய பாடல்களோடு படைக்கப்பட்ட  இந்தத் தீபாவளி  பொது உபசரிப்பு நிகழ்ச்சியில்  இச்சபையின் முன்னாள்தலைவர்கள், தொழில் முனைவர்கள், வர்த்தக பிரமுகர்கள், அரசு சாரா இயக்கங்களின் பொறுப்பாளர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன