கோலாலம்பூர், நவ.28-

மக்களவையில், பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேசிய முன்னணியின் தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினரான டான்ஸ்ரீ நோ ஒமார் தகாதை வார்த்தையை உபயோகித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, சிலாங்கூரில் இரு மொழியிலான சாலை பலகைகள் அகற்றப்பட்டது தொடர்பில், அதிருப்தி கொண்டிருக்கும் சீன சமூகத்தினர் அம்மாநில சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி, ஙா கோர் மிங் சூப்பர்ஃபேன்ஸ் எனும் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது குறித்து நோ ஒமார் பேசினார்.

அவ்விவகாரம் குறித்து அரண்மனை உதவியாளர்கள் போலீஸில் புகார் அளித்ததாகவும் அவர் கூறினார்.

அப்போது, குறுக்கிட்ட ராயர், கூட்டத்தின் விதிமுறையை நோ ஒமார் பின்பற்ற வேண்டும் எனவும் ஙா கோர் மிங்  உள்பட யார் பெயரையும் குறிப்பிடக்கூடாது எனவும் அவர் கூறியிருந்தார். மேலும், பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருவதையும் ராயர் சுட்டிக்காட்டினார்.

இதனால், கோபமடைந்த நோ ஒமார் அவரை முட்டாள் என கூறியதால், மக்களவையில் அவரது ஒலிப்பெருக்கியை துணை சபாநாயகர் முஹம்மட் ரஷிட் ஹஸ்னோன் முடக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பக்காத்தானின் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான ராம்கர்ப்பால் சிங், அந்த பேஸ்புக் பக்கத்திற்கும் துணை சபாநாயகர் ஙா கோர் மிங்கிற்கும் தொடர்பு இல்லாததை, நோ ஒமார் அறிவாரா? என கேள்வியெழுப்பினார்.

அப்போது, உண்மைதான், தாம் ஙா கோர் மிங்கின் பெயரைக் குறிப்பிடவில்லை என நோ ஒமார் பதிலளித்த போது, ராயர் அவரை நோக்கி நீங்கள்தான் முட்டாள் என உரக்க கத்தினார்.

பிறகு, அவ்விருவரிடையே வாக்குவாதம் கடுமையான நிலையில், நோ ஒமார், ராயரை தகாத வார்த்தையில் திட்டியதோடு, அக்கூட்டம் அமைதியாக நடைபெற வேண்டுமானால், அவரை அங்கிருந்து விரட்ட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.