கோலாலம்பூர், நவம்பர் 28-

பல  ஆண்டுகளாக வீட்டு வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் திருமதி சிம்மாசலம் சிரமத்தை எதிர்நோக்கி வந்தார். இது சம்பந்தமாக மஇகா தலைமையக அலுவலகத்திற்கு உதவி தேடி வந்தபோது, அவருக்கு உதவ நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகாவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்வந்தார். அவரது வீட்டு வங்கிக் கடனை அடைத்து, வீட்டையும் மீட்டெடுத்து, அந்த ஏழைத் தாயின் கண்ணீரைத் துடைத்துள்ளார்.

மஇகா எப்போதும் தனது உறுப்பினர்களின் நலனின் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், திருமதி சிம்மாசலம் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த பாசிர் சாலாக் தொகுதியில் மஇகாவின் உறுப்பினராக உள்ளார். கட்சி உறுப்பினர் ஒருவரின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், தனது சொந்தப் பணமாக வெ. 10,500 வழங்கி அந்த வீட்டுக் கடனைத் தீர்த்துள்ளார்.

உதவிப் பெற்றுக் கொண்ட சிம்மாசலம் தான் பல ஆண்டுகளாக எதிர்நோக்கி வந்த இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் உதவியை தனது வாழ்நாள் மறக்க முழுவதும் மறக்க இயலாது என்றும், அவருக்கு தாம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருப்பதாகவும் கூறினார். மஇகாவின் வளர்ச்சிக்காக தமது இறுதி மூச்சுவரை பாடுபட போவதாகவும் சிம்மாசலம் தெரிவித்தார். மேலும், இந்த உதவியை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மஇகாவின் மகளிர் பகுதியின் தேசியத் தலைவர் திருமதி ஜெ.உஷாநந்தினி அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்