கோலாலம்பூர், நவ.28-

அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கும்போது  ஊழல் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு இவர்களை நாட்டிற்குள் தருவிப்பதற்கான அதிகாரத்தை மீண்டும் மனித வள அமைச்சிடமே ஒப்படைக்க வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) தலைமை ஆணையர் லத்திஃபா கோயா தெரிவித்தார்.

உள்துறை அமைச்சு கொண்டிருக்கும் இந்த அதிகாரத்தை மனித வள அமைச்சிடமே திரும்ப ஒப்படைக்கும்படி எஸ்பிஆர்எம் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நடைமுறை ஊழல் பெருகுவதற்கு வழிவகுப்பதோடு அந்நிய தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்று லத்திஃபா கூறினார்.

“ துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் இந்தக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதுதான் எஸ்பிஆர்எம்மின் பரிந்துரையாகும். அந்நிய தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான அதிகாரத்தை மீண்டும் மனித வள அமைச்சிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்.”என்று தலைநகர், பங்சார் உத்தாமா கிளப்பில் ஊழல் எதிர்ப்பு கலாசாரம் மீதான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட துறைகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்காக மட்டுமே இவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டால் மோசடி மற்றும் அந்நிய தொழிலாளர் துஷ்பிரயோக பிரச்னைக்கு இடமிருக்காது. பல்வேறு துறைகளில் அந்நிய தொழிலாளர்களின் தேவையை  அடையாளம் காணக்கூடிய ஆற்றல் மனித வள அமைச்சிடம் மட்டுமே உள்ளது.

ஆகையால் மனித வள அமைச்சிடமே  அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.