கோலாலம்பூர், டிச.2-

அம்னோவின் வரலாற்றில் தவறு செய்த தலைவர்களை அக்கட்சி தற்காத்ததில்லை என அதன் இளைஞர் பிரிவு தலைவரான டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி டுசூக்கி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அரசாங்கத்தில் அங்கம் வகித்த அம்னோ, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட தலைவர்களை தற்காக்கவில்லை. எந்த தலைவரும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்படாத வரையில், நீதிமன்றத்திற்கு முன்பதாக, நாம் அவர்களை தண்டிக்க முடியாது என மலேசியாகினிக்கு வழங்கிய நேர்க்காணலில் டாக்டர் அஷ்ராஃப் கூறியுள்ளார்.

அம்னோவின் முன்னாள் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தவறு செய்ததற்காக தண்டனை வழங்கப்பட்டு விட்டதா? அவர் மீது தற்போது குற்றச்சாட்டுகள்தான் சுமத்தப்பட்டுள்ளன. இஸ்லாம் சமயத்தில், ஒருவர் குற்றம் செய்தது நிரூபிக்கப்படாத வரையில், நாம் அவர்களைத் தண்டிக்கக்கூடாது என வலியுறுத்துவதாக டாக்டர் அஷ்ராஃப் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, டத்தோஸ்ரீ நஜீப் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு அவர் அவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் நிறுவனத்திற்கு சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட்டில் முறைகேடு செய்ததாக டத்தோஸ்ரீ நஜீப் மீது சுமத்தப்பட்டுள்ள 7 குற்றச்சாட்டுகளில் அவர் தற்காப்பு வாதம் புரிய வேண்டுமென உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி, உத்தரவிட்டிருந்தது.