லிவர்பூல் அதிரடி! வெங்கருக்கு மரண இடி

லண்டன், ஆக. 28-

இவ்வாண்டுக்கான பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்ல வேண்டுமென்ற ஒரே முனைப்புடன் இருக்கும் லிவர்பூல் அந்த பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மலேசிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் மற்றொரு முன்னணி கால்பந்து அணியான அர்செனலை அது சந்தித்து விளையாடியது. இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணிகள் சந்தித்து விளையாடியதால் உலகக் கால்பந்து ரசிகர்களை கவனத்தை இந்த ஆட்டம் ஈர்த்தது.

முழு ஆட்டத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த லிவர்பூல் அணி, அர்செனல் அணியின் தற்காப்பு பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து தொடர் தாக்குதல்களை தொடுத்தது. இதன் விளைவாக 17ஆவது நிமிடத்தில் ஃபெமிகோ லிவர்பூல் அணிக்கான முதல் கோலை அடித்தார். முற்பாதி ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் லிவர்பூல் அணிக்கான 2ஆவது கோலை சாடியோ மானே போட்டார். இதனால் முற்பாதியில் முடிவில் லிவர்பூல் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னிலை பெற்றது.

பிற்பாதியில் அர்செனல் அதிரடி படைக்குமென அதன் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.  57ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கான 3ஆவது கோலை முஹமட் சாலா அடித்தார். மாற்று ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட டேனியல் ஸ்டுரீச் 77 ஆவது நிமிடத்தில் புகுத்திய கோல் 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் லிவர்பூல் அணியின் வெற்றிக்கு  வழிவகுத்தது.

இதனிடையே அர்செனல் அணியின் நிர்வாகி அர்சென் வெங்கருக்கு எதிராக ஆட்டக்காரர்கள் நடந்து கொள்வதாக சர்ச்சை எழுகின்றது. இப்பருவத்தின் தொடக்கத்தில் லைஸ்டர் சிட்டி அணியை 4-3 என்ற கோல் எண்ணிக்கையில் அர்செனல் போராடி வென்றது. பின்னர் கடந்த வாரம் நடந்த ஆட்டத்தில் ஸ்டோக் சிட்டியிடம் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வி கண்டது. தொடர்ந்து அர்செனல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், வெங்கர் நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹம் அணி 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் பெர்ன்லி அணியிடம் சமநிலை கண்டது.  முன்னதாக செல்சீ அணி 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் எவர்ட்டனை வென்றது.