கோலாலம்பூர், ஆக.29 –
நாட்டின் 60 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் முழு ஒத்திகையில் பிரதமர் டத்தோஸ்ரீ மனநிறைவுக் கொண்டுள்ளார். மெர்டேக்கா சதுக்கத்தில் செவ்வாய்கிழமை சுமார் 18 ஆயிரம் பேர் இந்த ஒத்திகையில் கலந்து கொண்டனர்.
காலை ஏழு மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற இந்த ஒத்திகையில் கோலாலம்பூர், சிலாங்கூர் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், தேசிய கலை, கலாச்சார துறையின் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை நாட்டின் 60 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட அனைத்து தரப்பினரும் தயாராக இருப்பதை தாம் ஒத்திகையில் காண முடிந்ததாக நஜிப் தெரிவித்தார்.
இந்த ஒத்திகையில் தகவல், தொடர்பு , பல்லூடக அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாலே சைட் கெரூவாக்கும் கலந்து கொண்டார்.
1957 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி மெர்டேக்கா அரங்கில் நடந்த முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தைப் போல், இம்முறையும் சுதந்திர தினம் கொண்டாடப்படும் என்று அண்மையில் சாலே சைட் கெரூவாக் அறிவித்திருந்தார்.
அதனை நிரூபிக்கும் வகையில் மெர்டேக்கா சதுக்கத்தில், மெர்டேக்கா அரங்கதைப் போல அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஒத்திகையில் பிரதமரும் ஏழு முறை ” மெர்டேக்கா ” என முழக்கமிட்டார்.


