போர்ட்டிக்சன் ஆக 29-
போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளி சாதனை மாணவர்களை கௌரவிக்கும் வண்ணமும் , அவர்களுக்கு மேன்மேலும் ஊக்கம் அளிக்கும் நோக்கத்தோடும் மஇகாவின் தேசிய இளைஞர் பகுதியின் துணைத்தலைவர் தினாளன் டி.ராஜகோபால் தலைமையில் பாராட்டு விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இளம் அறிவியல் ஆய்வாளர்கள் 2017 இல் தங்கம் வென்ற போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியை சார்ந்த ம.டிவாகரன், மோ.அமுதா, வி.சுவிதா, அ.கிரிஷா, சே.பிரேமா ஆகியோருக்கும் டென்னிஸ் விளையாட்டில் சிறந்து விளங்கும் இதே பள்ளியை சார்ந்த ம.சுரேந்திரன் , ஹாக்கியில் கலக்கும் க.மணிஷர்மா, சதுரங்கத்தில் சிறந்து விளங்கும் வி.தேவன், மலாய் மொழியில் சாதனை படைத்த க.குரோஷினி ஆகிய மாணவர்களுக்கு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவிற்கு தெலுக்கெமாங் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் அச்சுதன் உறுதுணையாக இருந்தார். இந்த விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி மகேஸ்வரி, முன்னாள் தலைமையாசிரியர் திரு. தாமோதிரன், ஆசிரியப்பெருமக்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு. சிவா, டத்தோ வேலு, நெகிரி மாநில இளைஞர் பகுதி துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் இளைஞர் பகுதியின் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
சி யூவ் போர்ட்டிக்சன்” உணவகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முக்கிய அம்சமாக மாணவர்களின் திறமையை அங்கீகரிக்கும் வண்ணம் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.
மாணவர்கள் மேன்மேலும் தங்களது திறமையினை வளர்த்துக்கொண்டு வாழ்வில் முன்னோக்கிச் செல்ல வேண்டுமென தினாளன் கேட்டுக்கொண்டார். மேலும் மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.



