கேமரன்மலை, ஆக. 29-

14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் கேமரன் மலையில் வேட்பாளர் யார் என்ற கேள்வி காட்டுத்தீ போல பரவி வருகின்றது. இந்நிலையில் ம.இ.கா. சார்பில் கேமரன் மலை ஒருங்கிணைப்பாளராக ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் நியமிக்கப்பட்டார்.

அன்று தொடங்கி இன்று வரை கேமரன் மலையில் சிவராஜ் சுறாவளிப் பயணம் மேற்கொண்டு, மக்களை கட்டம் கட்டமாகச் சந்தித்து வருகின்றார். குறிப்பாக கேமரன் மலையில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் சென்று அதன் முழு நிலவரங்களை கண்காணித்து, அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார்.

குறிப்பாக கேமரன் மலையில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு நன்கு அறிமுகமான முகமாக சிவராஜ் மாறியிருக்கின்றார். அதோடு பொது இயக்கங்கள், ஆலயங்கள் என அனைவரையும் சந்தித்து, தேசிய முன்னணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அண்மையில் பகாங் பட்டத்து இளவரசர் துங்கு அப்துல்லாவுடன் சேர்ந்து கேமரன் மலை துப்புரவுப் பணியையும் அவர் மேற்கொண்டார்.

இந்தியர்கள் மட்டுமின்றி, மலாய்க்காரர்கள், சீனர்கள் மத்தியில் சிவராஜ் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறார். இத்தொகுதியில் அவர் வேட்பாளராக நிறுத்தப்படும் சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக அவ்வட்டார மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

இளம் பட்டதாரி கேமரன் மலையில் வேட்பாளராக நிறுத்தப்படுவதை அப்பகுதி மக்களும் எதிர்பார்க்கின்றார்கள். இந்நிலையில் அதற்கான சிறந்த தேர்வாக சிவராஜ் விளங்குகின்றார். முன்னதாக கேமரன் மலை தேசிய முன்னணித் தலைவர், பிரதமர் அறிவிக்கும் வரை இத்தொகுதி ம.இ.கா.விற்கு சொந்தமானது என்பதை அதிரடியாக அறிவித்தார்.

இதனிடையே ஒவ்வொரு வாரமும் கேமரன் மலைக்குச் செல்லும் சிவராஜ், முழு நேரமாக அங்கேயே செயல்படுவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார். கேமரன் மலையை பொறுத்தவரையில் தேசிய முன்னணிக்கு சாதகமான தொகுதிதான்.  இத்தொகுதியில் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணியும், டத்தோஸ்ரீ பழனிவேலும் போட்டியிட்டு வெற்றி கண்டனர். முன்னதாக இத்தொகுதியில் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸூம் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.