14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி (பி.எச்) வெற்றி பெற்ற பின்னர் தான் மலேசியாவிலிருந்து தப்பி ஓடியதாக டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரின் முன்னாள் உதவி அதிகாரி ஒப்புக் கொண்டார்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்த ரிசால் மன்சோர், முன்னாள் அரசாங்கத்தின் சூரிய கலப்பின திட்டத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி) தடுத்து வைத்துள்ளது என்பதைத் தாம் அறிந்தபோது அச்சத்தில் அவ்வாறு செயல்பட்டதாகக் கூறினார்.

இந்த அறிக்கையில் ரிசால் குறிப்பிட்டுள்ள இரண்டு நபர்கள் ஜெபக் ஹோல்டிங்ஸ் (ஜெபக்) நிர்வாக இயக்குநர் சைடி அபாங் சம்சுதீன் மற்றும் சைடியின் வணிக பங்குதாரர் ரேயன் ராட்ஸ்வில் அப்துல்லா ஆகியோர் ஆவர். இது குறித்து சரவாக் ரிப்பொர்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் “சைடி மற்றும் ரேயன் ஆகியோர் எம்.ஏ.சி.சி யால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நான் அறிந்த பிறகு பீதியடைந்தேன். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்தேன்,” என்று அவர் கூறினார்.

ரிசால் கருத்துப்படி, 2018 பிப்ரவரி முதல் மார்ச் வரை எம்.ஏ.சி.சி இந்த திட்டத்தை விசாரிக்கத் தொடங்கியது, ஆனால் அது அவருக்கும் முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மாவிற்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையிலிருந்ததால் தாம் கவலைப்படவில்லை என்றார் அவர்.

நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் தேர்தலில் தோல்வி கண்ட பிறகு சூழ்நிலை மாறியதாக ரிசால் குறிப்பிட்டார்.

ஜகார்த்தா தாம் இருந்த சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு, எம்.ஏ.சி.சி தம்மைத் தொடர்பு கொண்டு, விசாரணைக்கு உதவ ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்ததாக ரிசால் கூறினார்.

தமது சொந்த வேலை இருப்பதால், விசாரணையை ஒத்திவைக்குமாறு எம்ஏசிசியிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். “விசாரணைக்கு உதவ எம்.ஏ.சி.சி எனக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த பிரச்சினைகளிலிருந்து தாம் தப்பிக்க முடியாது என்பது தமக்குத் தெரியும் என்றும், இதனை எதிர்கொள்ள வேண்டியது கால சூழ்நிலை எனவும் அவர் குறிப்பிட்டார்.

“நான் எம்.ஏ.சி.சி.க்கு வந்த நாளில், நான் கைது செய்யப்பட்டு ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டேன். அடுத்து 4 குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டேன்,” என்று அவர் கூறினார். ரோஸ்மா சம்பந்தப்பட்ட வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக அவர் விளக்கம் அளித்தார்.

முன்னதாக தாம் அளித்த ஆதாரங்களை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற ரிசாலின் விண்ணப்பத்தை நீதிபதி முகமட் ஜெய்னி மஸ்லான், நிராகரித்தார்.