தடுக்க முடிந்த இறப்பே தற்கொலை – மனம் விட்டு பேசுங்கள் – காது கொடுத்து கேளுங்கள்..!
இன்றைய நவீன பொருளாதார உலகில், எல்லாவற்றிற்கும் உடனடி தீர்வு இல்லை என்று சொல்லை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இன்றைய தலைமுறையினர் இல்லை.
அதன் வெளிப்பாடே, 40 வினாடிக்கு ஒரு தற்கொலை;
ஓர் ஆண்டிற்கு, எட்டு லட்சம் பேர் வரை தற்கொலை என்று உலக சுகாதார நிறுவமான WHO-வின் ஆய்வு கூறுகிறது.
இம்முடிவை எடுப்பவர்களிலில், பெண்களைவிட ஆண்களே அதிகம் என்பதும் மற்றொரு அதிர்ச்சியே..!
தற்கொலை முயற்சி குறித்த விழிப்புணர்வை உலக அளவில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலே ஆண்டு தோறும், செப்டம்பர் 10-ஆம் தேதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
தற்கொலையை தடுக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பதே உலக தற்கொலை தடுப்பு தினத்தின், முக்கிய நோக்கமாகும். ஒரு மனிதன் வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களை தாங்க முடியாமல் போராட்டங்களை எதிர்த்து போராட முடியாமல் தன்னை முடித்துக் கொள்ளவதே தற்கொலை.
தற்கொலை என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. அது அவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தையும், பெரிய அளவில் சமூகத்தையும் சேர்த்தே பாதிக்கின்றது.
மனச்சோர்வு, மனச்சிதைவு நோய், குடி மற்றும் போதை பழக்கம் என மனநோய்கள் ஒருபுறமிருக்க இதுபோன்ற எல்லா முடிவுகளுக்கும் மனநல நோய்கள் மட்டுமே காரணம் அல்ல.
குடும்ப சிக்கல், தேர்வில் தோல்வி, காதல் ஏமாற்றம், தொழிலில் கஷ்டம் போன்ற சூழல்கள் ஏற்படுத்தும் மனநலக் குறைபாட்டாலும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் அதிகமாகின்றது.
ஒருவர் எதிலும் நாட்டம் இல்லாமல் இருப்பது, தனிமைப்படுத்திக் கொள்ளுதல், தூக்கம் மற்றும் பசியின்மை, குடிப்பழக்கம் அதிகரித்தல், தகுதியற்றவன் என்ற எண்ணம், யாராலும், எதுவும் எனக்கு உதவ முடியாது என்ற எண்ணம் மற்றும் எதிர்காலத்தின்மீது நம்பிக்கை இல்லாத மனநிலை போன்றவை தற்கொலையின் அறிகுறிகளாக காணப்படுகின்றது.
ஒருவருக்கு இத்தகைய எதிர்மறை எண்ணங்கள் உருவாகும் பொழுது தனிமைப்படுத்திக் கொள்ளாமல் நெருங்கிய உறவுகளை அணுக வேண்டும். நம்மை நெருங்கியவர்களுக்கு இத்தகைய எண்ணம் அல்லது இத்தகைய நிலை வந்தால் என்ன செய்வது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த மனநிலை மற்றும் எண்ணங்களை பற்றி யாராவது நம்மிடம் கூறினால், சிரமம் கொள்ளாமல் காது கொடுத்து கேட்க வேண்டும்.நமக்கு அனுபவம் உள்ள விஷயம் என்றால் அதற்கு ஆலோசனை வழங்கலாம். அவர்களை தனியாக விடாமல் ஆதரவு தரவேண்டும். ஒருவேளை நாம் அருகில் இல்லை என்றால் அவருடன் இருப்பவர்களுக்கு இத்தகைய எண்ணம் குறித்து நாம் தெரிவிக்க வேண்டும்
தடுக்க முடிந்த இறப்பே தற்கொலை – மனம் விட்டு பேசுங்கள் – காது கொடுத்து கேளுங்கள்..!


