மலாக்கா செப், 13-
மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்றத்தின் கிராண்ட் “மெஸ் நைட்” மிகவும் விமரிசையாக அண்மையில் மலாக்கா “லாகிநிஸ்டா நட்சத்திர” விடுதியில் அமைந்துள்ள பசிஃபிக் பால்ரூமில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் சபா, சரவாக் மாநிலம் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட டத்தோக்கள் பாரம்பரிய “மெஸ்கிட்” உடையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்ற ஸ்தாபகர் டத்தோ பங்ளிமா அஸ்ஹாருல்டா சால் தலைமையுரையில் டத்தோஶ்ரீ டாக்டர் தவத்திரு ஶ்ரீ சுகுந்தன் அவர்களின் தேசிய துணைத்தலைவர் நியமனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கோலாலும்பூரில் நடந்த உச்சமன்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட மன்றத்தின் கொள்கையும் கோட்பாடுகளும் டத்தோஶ்ரீ டாக்டர் தவத்திரு ஶ்ரீ சுகுந்தன் தமது சிறப்புரையில் அறிவித்தார்.

இம்மன்றத்தின் ஆறு கோட்பாடுகளும், கொள்கைகளும் அதில் மூன்று சிறப்பம்சங்கள் குறித்து விளக்கமளிக்கையில் முக்கிய அம்சங்களான மாமன்னர் மற்றும் மாநில இராஜாக்களின் சமஸ்தான பரிபாலனம் நிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சமய,இன பாகுபாடின்றி சமூகவியல் அடிப்படையில் நீதியும் , ஒற்றுமையும் பேணிக்காக்கப்பட வேண்டும் என்பதையும் இந்நாட்டின் அரண்மனை கலாச்சார பண்பாடுகளும் தொடர்ந்து காக்கப்பட வேண்டும் என்றும் தேசிய உதவித் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் தவத்திரு ஶ்ரீ சுகுந்தன் வலியுறுத்தினார்.
மக்கள் தொண்டு திட்டங்கள் படி மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்றம் மூன்று முதியோர் காப்பகங்களுக்கும் மற்றும் இரண்டு ஆதரவற்றோர் காப்பகங்களுக்கும் கணிசமான நன்கொடை வழங்கியது. இத்தொகையை இவ்வமைப்புகளின் தலைமை பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
வரக்கூடிய காலங்களில் பொதுமக்களுக்குச் சேவையாற்றும் பல திட்டங்களை மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்றம் அமல்படுத்தும் என்று தேசிய உதவித் தலைவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


