மலேசிய இந்தியச் சமூகத்திற்குச் சேவையாற்றும் நோக்கம் கொண்ட அரசியல் பின்புலமற்ற இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் மூலம் சமூகச் சிக்கல்கள் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் மஇகா இளைஞர் பணிப்படை அமைக்கப்பட்டது.

மஇகா தேசிய தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்கள் மஇகா இளைஞர் பகுதியின் தேசிய தலைவராக இருந்த காலத்தில் அவரால் தோற்றுவிக்கப்பட்ட இப்பணிப்படை தற்போதைய இளைஞர் பகுதித் தலைவர் தினாலன் இராஜகோபாலு தலைமையில் புதுத்தோற்றம் கண்டுள்ளது.

அந்த வகையில், கடந்த வாரம் நடந்து முடிந்த பகாங் மாநில மஇகா இளைஞர் பிரிவின் பேராளர் மாநாட்டில் பகாங் மாநில அளவிலான மஇகா இளைஞர் பணிப்படை 2.0 அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம் கண்டது.

மலேசிய இந்தியர்களின் நலனைக் காப்பதற்கும், சமூகத்தின் கண்ணியத்தை நிலைநாட்டுவதற்கும், அரசியலமைப்புக்கேற்ப நாட்டை வளம்பெற செய்வதற்கும் சேவையாற்ற எந்நேரமும் தயாராக இருக்கும் உணர்வுமிக்க தன்னார்வலர்களை உருவாக்கும் வண்ணம் இந்த பணிப்படை அமைக்கப்பெற்றதாக பகாங் மாநில இளைஞர் பகுதித் தலைவர் கார்த்திகேசன் முருகையா தெரிவித்தார்.

சமூகத்திற்கு நிறைவான சேவையை வழங்குவதோடு அடுத்தக் கட்டச் சமூகத் தலைவர்களை உருவாக்கும் வண்ணம், இந்தப் பணிப்படையானது சமூக நலன் மற்றும் தன்னார்வலம், ஆன்மீகம், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம், கல்வி, அரசியல், விளையாட்டு என பல்வேறு துறைகளின் திட்டமிடலோடு தோற்றம் கண்டுள்ளது.

இந்தப் பணிப்படையின் மூலம், மலேசிய இந்திய இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதோடு சமூகத்தின் வளர்ச்சிக்கும் தங்களின் பங்களிப்பைச் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கார்த்திகேசன் மேலும் குறிப்பிட்டார்.