கோலாலம்பூர், செப்.14-


இந்திய இளைஞர்கள் பரந்து விரிந்து கிடக்கும் உணவு மற்றும் விவசாய துறையில் முழு மூச்சாய் ஈடுபட்டு முன்னேற்றம் காண வேண்டும் என்று லோட்டஸ் குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் கேட்டுக் கொண்டார்.

இந்தியர்கள் வசம் இருந்த பல தொழிற்துறைகளில் தற்போது வெளிநாட்டினர் கோலோட்சி புரிவதைக் காண் முடிகிறது. இதனைக் களைய இளைஞர்கள் இத்துறைகளில் கால் பதிக்க வேண்டும். உரிய தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டால் இவர்கள் இத்துறைகளில் நிச்சயம் முன்னேற்றம் காணலாம் என்று இங்கு கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் 91 ஆவது பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.

தனிமரம் தோப்பாகாது. இதற்கேற்ப சங்க உறுப்பினர்கள் அனைவரும் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருமனதோடு ஒன்றிணைந்து மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் பல ஆக்கப்பூர்வ திட்டங்களை வகுத்திருப்பதாகவும் ஒரு கோடி வெள்ளியை உள்ளடக்கிய முதலீட்டு நிறுவனத்தை அமைப்பதும் அவற்றில் ஒன்றாகும் என்று அதன் தலைவர் டத்தோ ஆர்.ராமநாதன் தெரிவித்தார்.

“முதலீட்டாளர்களிடமிருந்து 10,000 வெள்ளி,30,000 வெள்ளி, 50,000 வெள்ளி என வசூல் செய்து அதனை மேம்பாடடைந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்வோம். அதில் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களிடையே கிர்ந்தளிப்போம்.இதன் வழி இளைஞர்களுக்கும் உதவலாம். இந்த முயற்சிக்குத் தாம் தோள் கொடுக்க விரும்புவதாக மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் வாக்குறுதி அளித்துள்ளார்” என்று ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் அனேகன் இணய தளத்திடம் அவர் விவரித்தார்.

அடுத்து, கிள்ளான் வட்டார உறுப்பினர்களின் மேம்பாட்டிற்காக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் கிள்ளானில் கட்டடம் ஒன்றை வாங்கவிருப்பதாகவும் சொன்னார்.

“ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவதே சங்கத்தின் தலையாய நோக்கம். இதன் அடிப்படையில் இன்னும் ஈராண்டு காலத்தில் 400 முதல் 500 தொழில் முனைவர்களை உருவாக்கும் இலக்கை சங்கம் கொண்டுள்ளது. முதற் கட்டமாக, இளம் தொழில் முனைவர்களுக்கு பயிற்சி அளித்து மித்ரா வழி ஒவ்வொருவருக்கும் 5,000 வெள்ளி சீட் நிதி வழங்குகிறோம்” என்றார்.

நாட்டில் கடந்த 91 ஆண்டுகளாகப் பீடு நடை போட்டு வரும் கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் 2020-2022 ஆம் தவணைக்கான புதிய நிர்வாக அணியினருடன் மேலும் உத்வேகத்துடன் செயல்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.