கோலாலம்பூர், செப். 23-
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நம்பிக்கைக் கூட்டணி தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு அமானாவின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிளவுபடாத ஆதரவு உண்டு என அக்கட்சியின் தலைவர் மாட் சாபு அறிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தாம் கொண்டிருப்பதாக அன்வார் அறிவித்த அடுத்த கணமே அமானா தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.

டத்தோஶ்ரீ அன்வாரின் அறிவிப்பை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான ஆதரவை அவர் பெற்றுள்ளார் என்பதையும் தாங்கள் அறிந்திருப்பதாக மாட் சாபு கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணியில் அமானா வழங்கிய வாக்குறுதி தொடர்ந்து நிலைப்பதாகவும், ஆட்சியை அமைப்பதற்கு முழுமையான ஆதரவை டத்தோஶ்ரீ அன்வாருக்கு வழங்குவதாகவும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.