கோலாலம்பூர், செப். 24-
சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சியை அவதூறாகப் பேசிய நபரின் செயலை மலேசிய இந்தியக் காங்கிரஸ் மகளிர் பிரிவு வன்மையாகக் கண்டிக்கின்றது. இருப்பினும் இவ்விவகாரத்தை அரசியலாக மாற்றக்கூடாது என அதன் தலைவி உஷா நந்தினி வலியுறுத்தினார்.

காமாட்சியை அவதூறாகப் பேசிய நபர் மீது சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என மஇகா தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறிவிட்டார். இருப்பினும் இவ்விவகாரம் குறித்து பலர் சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்களைப் பதிவிட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு பெண்மணிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவதூறு நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கின்றோம். ஆனால் அது அரசியலாக மாறக்கூடாது. அரசியல் லாபத்திற்காக அனைவரையும் குறை கூறும் நடைமுறையைக் கைவிட வேண்டுமென மஇகா தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உஷாநந்தினி மேற்கண்டவாறு கூறினார்.

காமாட்சி குறித்து வெளிவந்த காணொளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட பழமையான காணொளி என எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அது இப்போது எப்படி சர்ச்சையானது? அரசியலுக்காக இது முன்னெடுக்கப்பட்டிருந்தால் இது பெண்களுக்கு தலைகுனிவு என அவர் மேலும் கூறினார்.

காமாட்சியை இழிவாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மஇகா ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் நாங்கள் பரிந்துரை செய்தோம். ஆனால் இந்த காணொளி எடுக்கப்பட்டபோது அந்நபர் மஇகா உறுப்பினர் அல்ல என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் உஷா நந்தினி கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் காமாட்சிக்கு மனநிறைவு இல்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கலாம். அப்போதுதான் அது அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என அவர் கூறினார்.

இந்நிலையில் ஒட்டுமொத்த மஇகா மகளிர்களையும் இழிவாகப் பேசுவதைக் காமாட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் அவரது ஆதரவாளர்களின் நடவடிக்கையும் நிறுத்தப்பட வேண்டும். இந்நடவடிக்கை தொடருமாயின் மஇகா மகளிர் பிரிவு போலீஸ் புகார் மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்யும் என அவர் எச்சரித்தார்.

ஆரோக்கியமான அரசியலை முன்னெடுப்பதற்குக் கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் என உஷாநந்தினி செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, காமாட்சி குறித்து ஒரு நபர் அவதூறாகப் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது குறித்து மஇகா தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காமாட்சி கேட்டுக் கொண்டார். இது குறித்து தான்ஶ்ரீ விக்னேஸ்வரன், சம்பந்தப்பட்ட நபர் மீது காமாட்சி சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது அனைவருக்கும் நல்ல பாடமாக அமையுமெனக் கூறியிருந்த நிலையில், இவ்விவகாரம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.