சிப்பாங் , நவம்ம்பர் 10 : –
கடந்த அக்தோபர் 28இல் பொறியியலாளரைக் கொலை செய்து சடலத்தை எரித்த வழக்கில் உள்ளூர் கலைஞரான எமர்ஜென்சி விஜய் சிப்பாங் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளார்.
விஜயன் பழனியப்பன் என்ற இயற்பயர் கொண்ட எமர்ஜென்சி விஜய் உள்ளூர் பாடகராவார். சொந்தத் தொழில் செய்து வரும் 42 வயது கொண்ட அவர் மீது தனக்குப் பழக்கமான பொறியியலாளரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்மீது சுமத்தப்பட்டக் குற்றத்தைப் பற்றிய விவரம் அறிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்த அவர் அதனை ஒப்புக் கொண்டதாகப் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த அக்தோபர் 28ஆம் நாளில் 42 வயதுமிக்க ஶ்ரீ கணிஸ் கணபதி பிள்ளையை அதிகாலை 2.38 மணிக்கும் 4.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சிப்பாங், கோத்தா வாரிசான் ஏர்போர்ட் வணிக மையம், ஜாலான் ஏர்போர்ட் சிட்டி 2இல் அக்குற்றத்தைச் செய்ததாக எமர்ஜென்சி விஜய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எமர்ஜென்சி விஜய் இன்று காலை 8.45 மணிக்கு நீதிமன்றத்திற்குக் கைவிலங்கிட்டுக் கொண்டு வரப்பட்டார்.
விசாரணை முடிந்த பின்னர் மரபணு சோதனையின் முடிவுகள் பெறுவதற்காக அடுத்தாண்டு பிப்பரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எமர்ஜென்சி விஜய்க்கும் கொலை செய்யப்பட்ட ஶ்ரீ கணிஸ் கணபதி பிள்ளைக்கும் காப்புறுதி, சொத்து முதலீடு விவகாரம் தொடர்பு கொண்டதாகவும் இதன் வழி குற்றஞ்சாட்டப்பட்ட எமர்ஜென்சி விஜய் தனிப்பட்ட இலாபம் பெற வேண்டி இக்கொலை நடந்திருக்கலாம் என சிலாங்கூர் குற்றவியல் விசாரணைப் பிரிவுத் தலைவர் மூத்தத் துணை ஆணையர் டத்தோ ஃபட்ஸில் அகமாட் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவியாக சந்தேகிக்கப்படும் நபர்கள் நவம்பர் 10ஆம் நாள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
கொலை தொடர்பாக கை கால்களில் ஏற்பட்டத் தீக்காயச் சிகிச்சைக்காக மாலை மணி 4.30 அளவில் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு வந்த முதன்மைக் குற்றவாளியை அங்கேயே கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த அக்தோபர் 30ஆம் நாள் டத்தோ ஃபட்ஸில் அகமாட் வெளியிட்ட அறிக்கையில், கொலை செய்யப்பட்டவர் இறப்பதற்கு அவரின் உடலிலும் கழுத்திலும் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தாக்கப்பட்டு தொயோத்தா காரோடு தீயிட்டு எரிக்க்ப்பட்டது காரணமாகி இருப்பதாக செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவு உறுதி செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
சுற்று வட்டாரத்தில் இருந்த பொதுமக்கள் பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாக அவசரப் பிரிவுக்கு அளித்தத் தகவலில் குறிப்பிட்டிருந்தனர்.
கேஎல்ஐஏ –விலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்த கொண்டிருந்த காரை அணைத்தனர். சுமார் 90% எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை மீட்டதாக மலேசியா கெஸட் தெரிவித்துள்ளது.


