பினாங்கு, நவம்பர் 8:-
வறுமையின் பிடியில் சிக்கி வாழ்க்கைப் போராட்டம் நடத்துகின்ற ஏழை இந்தியக் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உதவியளிக்கும் நடவடிக்கையில், ஒவ்வொரு தீப ஒளித் திருநாளிலும் அன்பளிப்பு வழங்கி ஆதரவளித்து வரும், பினாங்கு இந்து இயக்கத்தின் பரிவு, தொடர் கதையாக நீடிக்கிறது.
அவ்வண்ணம், இவ்வாண்டு தீப ஒளித் திருநாளில் அத்தகைய வறுமையான குடும்பங்களுக்கு உதவும் நடவடிக்கையில், 9 வது ஆண்டாக பினாங்கு இந்து இயக்கத்தினர் சிறியோர் பெரியோர் என சுமார் 80 பேருக்கு, வீட்டு உபயோகப் பொருள்களை
அன்பளிப்பாக வழங்கி தங்களின் தாராள உணர்வை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இந்நிகழ்வு நேற்று
முன்தினம் இங்கிருக்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரிய பொது அரங்கத்தில் நடைபெற்றது.
அத்தகைய ஏழையர்க்கு வீட்டு உபயோகப் பொருள்களான அரிசி, மாவுப்பால், பருப்பு, சீனி, மளிகைப் பொருள்கள் போன்றவற்றுடன், துணிமணிகளையும் இந்து இயக்கம் வழங்கி, தீபாவளி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதாக, அதன் தலைவராக வீற்றிருக்கும் பி.முருகையா எடுத்துரைத்தார்.
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தீபாவளி குதூகலத்தை ஏற்படுத்தி, விருந்தோம்பலும் வழங்கிய இந்து இயக்கத்தினர். பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் பண முடிப்புகளும் வழங்கி மகிழ்வித்ததோடு அனைவருக்கும் காலை ஆகாரத்துடன் மதிய உணவும் வழங்கி தங்களின் தாராள உணர்வை புலப்படுத்தினர்.
தீப ஒளித் திருநாளைக் கொண்டாடும் வகையில் அன்பளிப்புகளை வழங்கிய அத்தரப்பினர், அத்தகையப் பொருள்களை, உமையாள் ஜவுளியகம், ரமணி பேரங்காடி நிலையம்,
ஜெயம் பண்டகசாலை, என்ரிகோஸ் பல்பொருள் அங்காடி மற்றும்
தெஸ்கோ பேரங்காடி ஆகிய நிறுவனங்கள்
தாட்சண்ய சிந்தனையுடன் ஆதரவளித்திருந்ததாக முருகையா
குறிப்பிட்டார்.
இந்திய சமூகத்தினரில் ஆங்காங்கே அன்றாட பிழைப்புக்கே அல்லலாடும் ஏழைகள் பலர், பரிதாப நிலையுடன் வசித்து வருவதை சுட்டிக் காட்டிய அவர், இத்தகையோர் சொந்த வசிப்பிடமின்றி வாடகை வீடுகளில் குடியிருந்து, அதற்கானத் தவணைப் பணத்தையும் செலுத்த முடியாமல், பரிதவிப்புடன் இன்னலுருவதாக வருத்தம் தெரிவித்தார்.

மேலும் ஏழ்மை நிலையில் அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறு பிள்ளைகளும் மழலைகளும் போதிய உணவின்றி பசியில் துயருறும் பரிதாபம் வேதனையானதென்றும், சின்னஞ் சிறு குழந்தைகள் மாவுப்பாலுக்கு வழியின்றி நோகும் நிலை, நெஞ்சை உருக்கும் துயரமென்றும் விவரித்தார்.
வறிய நிலையிலுள்ள இந்தியப் பெற்றோர்கள் சிலர், தங்களின் 4 அல்லது 5 பிள்ளைகளோடு, வசதியற்றச் சூழலில்
ஒரு சிறிய அறையில் வாடகைக்கு குடியிருக்கும் நிர்ப்பந்த நிலமை பரிதாபகரமானதென்றும், தற்போதைய கொரோனா நோய் தாக்கத்தின் எதிரொலியாக இவர்களில் பலர் வேலையிழந்துத் திண்டாடுவது, சொல்லி மாளாத துன்பமென்றும் அவர் கவலை தெரிவித்தார்.
இத்தகையக் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளில் பினாங்கு இந்து இயக்கம் தீவிரம் காட்டி வருவதை எடுத்துரைத்த முருகையா, ஏழைக் குழந்தைகளுக்கு மாவுப்பால் வழங்கி ஆதரவளிப்பதில்
தாங்கள் தனிக் கவனம் செலுத்தி உதவி வருவதாகவும் கூறினார்.
எதிர்வரும் தீப ஒளித் திருநாள் தொடர்பில், பினாங்கிலுள்ள ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 10 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களும், இதே போன்று கெடா மாநிலத்திலுள்ள, பீடோங் அட்வர்ட் 1 தமிழ்ப்பள்ளியின் சேர்ந்த, 10 ஏழைச் சிறுவர்களின் குடும்பங்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்களும் வழங்கி, தாங்கள் உதவியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பினாங்கு பாயான் லெப்பாஸ் வள்ளலார் முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்திருக்கும் 17 முதியவர்களுக்கும் இவ்வாண்டு, தீபாவளி புத்தாடைகள் வழங்கி, தாங்கள் ஆதரவளித்திருப்பதாகவும் முருகையா விவரித்தார். அன்றைய தினம் நடந்தேறிய அன்பளிப்பு வழங்கிய நிகழ்ச்சியை, இந்து இயக்கத்தின் உதவித் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் வழி நடத்தி மகிழ்வித்த வேளையில், தன்முனைப்பு உரையும் நிகழ்த்தி வருகையளித்திருந்தோர் அனைவரது கவனத்தை ஈர்த்தார். நாட்டில் ஊடுருவியிருக்கும் கொரோனா தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு வழி முறைகளையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பினாங்கு இந்து இயக்கத்தின் ஆலோசகர்களான டத்தோ எஸ்.செல்லப்பன், டத்தோ என்.வாமதேவன், கொடை நெஞ்சர் டத்தோ கோ.மரியதாஸ் தம்பதியர், தெஸ்கோ பேரங்காடி நிறுவனத்தின் பொது நிர்வாகி எம்.தேவராஜன், தங்க வணிகர் ரவி முதலிய ஆதரவாளர்களும் வருகையளித்திருந்தனர்.
தீப ஒளித் திருநாளை கருத்தில் கொண்டு, ஏழை இந்தியக் குடும்பங்களுக்குத் துணிமணிகள், உணவு வகைகள், பணமுடிப்பு, வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியதில் பெரும் பங்காற்றிய, நன்கொடையாளர்கள் அனைவருக்கும், பினாங்கு இந்து இயக்கம் தனது மேலான நன்றியை காணிக்கையாக்குவதாக வும், தங்க வணிகர் ரவி ஒவ்வொருவருக்கும் தீபாவளி பணமுடிப்பு வழங்கி மகிழ்வித்திருப்பது தொடர்பிலும், முருகையா அகம் நெகிழ்ந்து வாழ்த்துரைத்தார்.


