கொழும்பு, திசம்பர் 1:-
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே மகர மத்தியச் சிறைச்சாலையில் கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ளது தொடர்பாக கைதிகள் நேற்று முன்தினம் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். சமையல் அறைகளுக்குத் தீ வைத்த கைதிகள், 2 வார்டன்களை பிணைக் கைதிகளாக பிடித்துக் கொண்டனர்.
இதையடுத்து அங்கு ஆயுதம் ஏந்திய காவல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 55 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 2 அதிகாரிகளும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.
இலங்கை சிறைகளில் 10 ஆயிரம் கைதிகளுக்கு மட்டுமே இடவசதி உள்ள நிலையில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறைகளில் கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ளது தொடர்பாக கடந்த சில வாரங்களாகக் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிட்-19 தொற்று ஏற்பட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை ஆயிரத்தை கடந்தது. இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் போகம்பர மத்திய சிறையில் நடந்த கல்லவரத்தின் போது கைதி ஒருவர் தப்பிச் செல்லும் முயற்சியில் சுவரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
– தி இந்து தமிழ்


