கோலாலம்பூர், திசம்பர் 3:-
ம.இ.கா. சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கெடா மந்திரி பெசார் கேட்டுக் கொண்டிருப்பது பொருத்தமில்லாது; அத்துடன் நாட்டில் உள்ள இந்து வழிபாட்டு தலங்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளைப் பற்றி அவர் புரிந்துகொள்ளவில்லை என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆலயங்கள் சட்டப்பூர்வமானவையா இல்லையா என்பதைப் பற்றி பேசுவதற்கு முன் கெடா மந்திரி பெசார், இந்திய சமுதாயம் இந்த நாட்டிற்கு ஆற்றியுள்ள சேவையையும் வரலாற்றையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எம்ஏபி வலியுறுத்துகிறது. அலோர் ஸ்டார் இரயில் நிலையத்திற்கு முன்புறத்தில் அமைந்திருந்த எண்பது ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆலயம் கடந்த ஜூலை மாதத்தில் இடிக்கப்பட்டபோது இதே மந்திரி பெசார் அதை நியாயப்படுத்தினார். மலேசிய அரசியல் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
அந்த ஆலயம் அமைந்திருந்த இடத்தில் மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப் பட வேண்டி இருந்தால், பொறுப்புள்ள மந்திரி பெசார் மாற்று இடத்தை வழங்கி இருக்க வேண்டும். மாறாக, அந்த வழிபாட்டு தலம் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளது என்று கூறி சட்டத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டார். மெர்டேக்காவிற்கு பின்புதான் நாட்டிற்குத் தேவையான சட்டங்கள் வரையப்பட்டன; அதற்கு முன்பே அமைக்கப்பட்ட அந்த ஆலயம் எப்படி சட்ட விரோதமாகும். உண்மையில் இது சட்டத்திற்குப் புறம்பான, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மாறான நடவடிக்கை ஆகும்.
ஓர் ஆலயத்தை வேறு இடத்திற்கு எவ்வாறு மாற்றுவது, வழிபாட்டுத் தல சிக்கலால் இந்து சமுதாயம் எத்தகைய பாதிப்பை எதிர்கொள்ளும் என்பதைப் பற்றியெல்லாம் தற்போதைய மாநில அரசாங்கத்திற்கு புரிதல் இல்லை என்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது. பிரச்சனைக்கு சுமூகமான திர்வைக் காண்பதற்குப் பதிலாக, இரக்கமின்றி ஓர் ஆலயத்தை இடித்து இதன் மூலம் கெடாவில் இஸ்லாமிய ஆட்சி நடப்பதாக காட்டி அரசியல் லாபம் ஈட்ட முயற்சிக்கிறார். ஆன்மிகத் தலைவர் நிக் அஸிஸ் தலைமையினான கிளந்தான் மாநில அரசாங்கம், இஸ்லாமிய மாநிலம் என்று பிரகடனம் செய்யப்பட்ட நிலையில்கூட இந்து வழிபாட்டு தலங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
நிக் அஸிஸைப் போன்ற பாஸ் தலைவர்கள் பின்பற்றிய கொள்கைகளை இன்றைய கெடா பாஸ் அரசின் மந்திரி பெசார் சீர்தூக்கிப் பார்ப்பதுடன், மூர்க்கத்தனமான கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.


