கோலா கெடா தாமான் பெர்சத்துவில் அமைந்துள்ள இராஜ முனீஸ்வரர் கோவிலை உடைக்க அனுமதித்ததன் வழி கடந்த ஜூலை மாதம் இரண்டு மத்திய அமைச்சர்களுக்கு கெடாவை வழி நடத்தும் அதன் முதல்வர் முகம்மட் சனுசி முகம்மட் நோர் (பாஸ்) வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றத் தவறி விட்டார் என மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணம் தெரிவித்துள்ளார்.
கடந்த 26 ஜூலை 2020அன்று மனிதவள அமைச்சரும் ம.இ.கா.வின் துணைத்தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணனும் பிரதமர் துறையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கான அமைச்சர் டத்தோ ஹாலிமா முகம்மட் சாடிக்கும் கெடா மாநில முதல்வரான முகம்மட் சனுசி முகம்மட் நோரை சந்தித்து அம்மாநிலத்தில் உள்ள இந்துக் கோவில்கள் தொடர்பாகக் கலந்துரையாடி இருந்தனர்.
கெடா மாநிலத்தில் கோவில் உடைப்புப் பற்றி முதலில் எங்கள் இருவருக்கும் தெரிவிப்பதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த உறுதிப்பாடு இந்துக் கோவில்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் அனைத்து வழிபாட்டுத் தளங்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த வாக்குறுதியைக் கொஞ்சம் கூட மதிக்காமல் இவ்வாறு கெடா மாநில முதல்வர் நடந்து கொண்டது தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக டத்தோ ஶ்ரீ சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
இச்செயல் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் கெடா மாநில முதல்வரின் இந்த நடவடிக்கை தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் தற்போதைய ஆட்சி குற்இத்து இந்தியர்களின் இந்தியர்களின் நம்பிக்கை பாதிப்படையச் செய்கிறது. இது எதிர்காலத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
கெடா மாநில முதல்வர் எங்களுக்கு முன்னதாகவே தெரிவிக்காமல் அந்தக் கோவில் உடைக்கப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் இஃது அதிகார துஷ்பிரயோகமாகும்.
கெடா மாநிலத்தில் உள்ள சமய / வழிபாட்டுத் தளங்கள் குறித்து அம்மாநில முதல்வரின் நிலைப்பாடு என்னவென்பதையும் விளக்க வேண்டும்.
இவ்விவகாரம் குறித்து பாஸ் கட்சியின் சில உயர்மட்ட தலைவர்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயற்சித்துள்ளது.
பாஸ் கட்சியானது இந்த நாட்டில் உள்ள அனைத்து இனத்துக்குமான , சமயத்துக்குமான கட்சி என்பதை உறுதி செய்ய வேண்டும் என டத்தோ ஶ்ரீ சரவணன் தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


