கோலாம்பூர் | பிப்பரவரி 5 :-
பொதுத் தேர்தல் வேண்டாம் என்றும் மக்கள் வழங்கிய அதிகாரம் திரும்பப் பெறப்பட வேண்டும் எனும் முடிவில் நம்பிக்கைக் கூட்டணி மிக உறூதியாக உள்ளது.
அவ்வப்போது பொதுத் தேர்தலைப் பற்றி பிரதர் குறிப்பிடுவடுவதைச் சுட்டிக் காட்டி நம்பிக்கைக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் இக்கட்டானச் சூழலில் மக்கள் பொதுத் தேர்தலை விரும்பவில்லை. மாறாக அவர்கள் கேட்பதெல்லம் அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டு கோவிட்-19 தொற்றையும் அதனால் ஏற்பட்டுள்ளப் பொருளாதாரச் சரிவையும் சரி செய்ய வேண்டும் என்பதே மக்களின் முதன்மை நோக்கு.
எனவே, கடந்த 14ஆம் பொதுத் தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்த நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் அதிகாரம் உடனடியாகத் திரும்ப வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வெளியிட்டிருந்த ஒரு கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் கூட்டறிக்கையில் பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் சைஃபுடின் இஸ்மாயில், அமானா கட்சியின் பொதுச் செயலாளர் ஹத்தா இரம்லி, ஜ.செ.க.வின் பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபோக் ஆகியோர் கையொப்பமிட்டு அவ்வறிக்கையை வெளியிட்டிருந்தனர்.
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்ததற்குக் காரணம் தான் ஶ்ரீ முகிதீன் யாசின் தலைமையேற்ற பெர்சத்து கட்சியும் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி, அவர் தம் குழுவினரும் நம்பிக்கைக் கூட்டணிக்கான ஆதரவை மீட்டுக் கொண்டதே காரணம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் ஶ்ரீ முகிதீன் யாசின் அம்னோ, பாஸ், ஜிபிஎஸ், சபா மாநிலத்தில் இருந்து சில கட்சிகளுடன் இணைந்து தேசியக் கூட்டணி உருவாக்கி ஆட்சியமைத்தார்.
இருப்பினும், தற்போது தேசியக் கூட்டணியின் நிலைமைத் தட்டுத் தடுமாறிக் கொண்டிருப்பதாகவும் பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் அடிக்கடி பேசப்பட்டுள்ளது.
தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெங்கு இரஸாலி ஹம்ஸா, நஸ்ரி அஸிஸ், அகமாட் ஜஸ்லான் யாக்கூப் ஆகிய மூவரும் பிரதமர் முகிதீ யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவ்வாறு கூறப்பட்டு வந்துள்ளது.
அவசர நிலை செயற்குழு என்னவானது ?
இதனைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றத்தில் கடந்த சனவரி 12 ஆம் நாள் அறிவிக்கப்பட்ட சுயேட்சை அவசர நிலை செயற்குழு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்பில் நம்பிக்கைக் கூட்டணி சார்ந்து இடம்பெற இருக்கும் பெயர் பட்டியலை கடந்த சனவரி 21ஆம் நாளே வழங்கப்பட்டு விட்டது.
இரு வாரங்களுக்கு மேலாகியும் அது குறித்த எந்தத் தகவலும் தாங்கள் பெற வில்லை என நம்பிக்கைக் கூட்டணி உறுப்புக் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் செயற்குழுவானது தற்போதையச் சூழலை நன்கு ஆராய்ந்து அவசர நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படுவது குறித்து இயங்கும் எனச் சொல்லப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.


